ஏற்கனவே, எம்.ஜி.ஆரின் படத் தலைப்பில் நாடோடி மன்னன் படத்தில் நடித்திருக்கும் சரத்குமார், இப்போது நம்நாடு படத்தில் நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா நடந்தது.
சரத்குமார் - தமனா இணைந்து நடிக்க இயக்குநர் சுரேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அரசு, சபரி படங்களை இயக்கியவர். தயாரிப்பு ரமேஷ்பாபு.
நம்நாடு தொடக்க விழாவில் நம் ஆளு சரத்குமாரைச் சந்தித்தபோது...
எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பை வைத்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் எம்.ஜி.ஆர். என் குரு என்று சொல்லலாம். அவர் நடித்த படத்தின் பெயரை என் படத்துக்கு வைத்துள்ளது மகிழ்ச்சி. பெருமை. கதைக்கு பொருத்தமாக இருப்பதால்தான் அந்தப் பெயரை வைத்துள்ளார்கள் என்பதை உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன். இப்படி அமைந்திருப்பதன் பின்னணியில் யாருமில்லை கடவுளைத்தவிர.
இது அரசியல் சார்ந்த படமா?
இதில் அரசியல் சார்ந்த கதை இருக்கும். தனிப்பட்ட என் அரசியல் இருக்காது. பொதுவான அரசியல் பற்றியே படம் பேசும். எனக்கென்று ஒரு அரசியல்பார்வை இருக்கிறது. கருத்து இருக்கிறது. ஆனால், இதை வேறு தயாரிப்பாளர்களின் படத்தில் உருவாகும் என் படத்தில் திணிக்க மாட்டேன். அப்படி சொந்தக் கருத்துக்களை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படிச் சொல்ல வேண்டிய கட்டம் வந்தால் நானே சொந்தப் படம் எடுத்து என் கருத்துக்களைச் சொல்வேன். அதுதான் சரியென்று நினைக்கிறேன்.
இந்தப் படத்துக்கு வேறு பெயர் சூட்டப்பட்டு இருந்ததா?
ஆமாம். முன்பு இதற்கு அழகிரி என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இது இந்தப் படத்தில் என் கேரக்டரின் பெயர்தான். ஆனால், அதற்கு எதிர்ப்பு வந்தால் நம்நாடு என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அழகிரி என்றால் பட்டுக்கோட்டை அழகிரியைக் கூட குறிக்கலாம். ஆனாலும் பெயரை மாற்றிவிட்டோம். நம்நாடு நல்ல பெயராக திருப்திப்படும் பெயராக அமைந்துவிட்டது. நாட்டைப்பற்றிக் கவனிக்கப்படும் ஒருவரைப் பற்றிய கதை என்று சொல்ல வைக்கிறது. தலைப்பு.
சினிமா அரசியல் என்கிற இரட்டைக் குதிரை சவாரி சரியாக இருக்கிறதா?
நான் இப்போது சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். கட்சிகளில் இருந்து எனக்கு மகிழ்ச்சியான அனுபவங்களை கிடைக்கவில்லை அதனால் ஏதோ ஒரு கட்சியில் இணைந்து செயல்படுவது என்னைப் பொறுத்தவரை இனி முடியாது. சினிமா அரசியல் இப்படி ஈடுபடுவதில் எனக்கு பிரச்சினை இல்லை.
சொந்தக் கட்சி எப்போது தொடங்க உத்தேசம்?
அது திடுதிப்பென முடிவு செய்யும் விடியல்ல. தீர யோசித்து செய்ய வேண்டும். கட்சி தொடங்கும் முன் நிறைய வேலை இருக்கிறது. அதற்கு நிறைய பயணம் செய்ய வேண்டும். கருத்துக்களை அறிய வேண்டும். கட்சியின் பெயர் கொள்கை சின்னம் இப்படி முடிவு செய்ய வேண்டியது நிறைய இருக்கும்.
உங்கள் கட்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?
நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். யாருடனும் விரோதம் பாராட்டாது. எல்லாருக்கும் பொதுவாக இருக்கும். முழுக்க புதுவழியில் செல்லக் கூடியதாக இருக்கும். நாகரீகமான பாதையில் போகக் கூடியதாக இருக்கும்.
உங்கள் மாறும் அரசியல் நிலைப்பாடுகளை உங்கள் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?
அவர்கள் ஆதரிக்கவே செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை நான்தான் முக்கியம். இன்னும் சொல்லப் போனால் என் முடிவுகளுக்க அவர்கள் கூட காரணமாக இருக்கிறார்கள். என் சுய மரியாதைக்கு களங்கம் வரும் போது என் முடிவுகளை அவர்களே மாற்றச் சொன்னதுண்டு.
நடிப்பு....?
அரசியலில் தீவிரமாக ஈடுபட்டாலும் நடிக்காமல் இருக்க மாட்டேன். சினிமா அரசியல் இரண்டிலும் எம்.ஜி.ஆர். ஈடுபட்டார். ஒரே நேரத்தில். ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் சினிமாவை கைவிட்டார். நானும் தொடர்ந்து நடிப்பேன். அரசியலில் ஈடுபடும் போது சினிமா ஒரு தடையாக இருக்காது. அப்படி ஒரு சூழல் வந்தால் அதுபற்றி யோசிக்கலாம்.
நடிசர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பீர்களா? எதிர்காலத் திட்டம்?
நான் நடிகர் சங்கத் தலைவராகப் பதவியில் நீடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. இதே போல கலைஞர்களின் வாழ்வில் அரசியலுக்கு இடம்தராமல் பிரச்சினைகளைத் தீர்ப்போம். நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் எதிர்காலத் திட்டங்கள் பற்றி நிறைய சொல்ல வேண்டியது உள்ளது. அதை செயலில் காட்டுவதே சிறப்பு என்று இருக்கிறோம். பொருத்திருந்து பாருங்கள்.
இப்போது நிறைய ரீமேக் படங்கள் வருகின்றனவே?
அதில் ஒன்றும் தவறு இல்லை. ஒவ்வொரு மொழியிலிருந்தும் வெவ்வேறு மொழிக்கு ரீமேக் செய்வது சகஜம்தான். அதில் குறை சொல்ல ஒன்றுமில்லை. நம் நாடு கூட ஒரு மலையாளப்படமான லயன் தழுவல்தான்.