அமலுக்கு வரும் 15 பிளஸ்

திங்கள், 7 பிப்ரவரி 2011 (15:16 IST)
சென்சாரின் கெடுபிடிகளுக்கு ஆளாகாத திரையுலகினர் இருக்க முடியாது. படைப்பாளிகளின் உரிமையை சென்சார் பறிக்கிறது என்ற விமர்சனம் தொன்றுதொட்டு இங்கு இருந்து வருகிறது.

இதனை முடிந்தளவு குறைக்க புதியதொரு சான்றிதழ் வழங்க சென்ட்ரல் போர்ட் ஆஃப் பிலிம் சர்ட்டிபிகேஷன் முடிவு செய்துள்ளது.

தற்போது யு, யுஏ, ஏ ஆகிய சான்றிதழ்கள்தான் முதன்மையாக வழங்கப்பட்டு வருகின்றன. இதில் யு என்பது அனைவரும் பார்க்கத்தகுந்தது. யுஏ பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோர் துணையுடன் பார்க்கக் கூடியது. ஏ பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியது.

இவற்றுடன் 15 பிளஸ் என்ற புதிய சான்றிதழை அறிமுகப்படுத்த உள்ளது சென்ட்ரல் போர்ட் ஆஃப் பிலிம் சர்ட்டிபிகேஷன். யுஏ, ஏ ஆகியவற்றுக்கு இடைப்பட்ட இந்த புதிய சான்றிதழின்படி பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட திரைபடங்களை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தத் தகவலை சிபிஎஃப்சி யின் சேர்பெர்சன் ஷர்மிளா தாகூர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்