'பென் ஹர்' என்ற சரித்திரப் படத்தின் மூலம் ஆஸ்கார் விருதைப் பெற்றவரும், 1950 - 60 களில் ஹாலிவுட் திரைப்படவுலகில் கோலோச்சிய நடிகராக திகழ்ந்தவருமான சார்ல்டன் ஹெஸ்டன் (வயது 84) மரணமடைந்தார்.
பெவேர்லி ஹில்ஸ்சில் உள்ள தனது இல்லத்தில் சனிக்கிழமை ஹெஸ்டன் மரணமடைந்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் பில் பவர்ஸ் இன்று தெரிவித்தார். ஹெஸ்டனின் உயிர் பிரிந்தபோது, அவருடைய மனைவி லிடியா அருகில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2002-ல் அல்சைமர் நோய் என்றழைக்கப்படும் நினைவாற்றல் குறைபாட்டினை உணர்ந்த ஹெஸ்டனுக்கு, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு இருந்து வந்தது.
'ஜூலியஸ் சீசர்', 'டென் கமென்மென்ட்ஸ்', 'எல் சிட்' போன்ற எண்ணற்ற சரித்திரப் படங்களில் நடித்து தனது ஆற்றலை வெளிப்படுத்திய இவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவராவார்.