த்ரில்லர் கதையை படமாக்கும் பாலாஜி சக்திவேல்

வியாழன், 6 மார்ச் 2014 (18:27 IST)
FILE
மனித உறவுகளுக்கும், உணர்வுக்கும் தனது படங்களில் முக்கியத்துவம் தரும் பாலாஜி சக்திவேல் இந்தமுறை மனிதனின் பயம், கவலை என்ற உணர்வுகளை மையப்படுத்தி தனது படத்தை இயக்குகிறார்.

ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நடுவில் அநியாயத்துக்கும் இடைவெளி விடுகிறவர் இந்தமுறை ஓரளவு விரைவாக அடுத்தப்பட வேலையில் இறங்கியுள்ளார். ஓராண்டு இடைவெளி என்பது பாலாஜி சக்திவேலைப் பொறுத்தவரை மிகக்குறைந்த இடைவெளி.

கடைசியாக அவர் இயக்கிய வழக்கு எண் படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இந்த புதிய படத்தையும் தயாரிக்கிறது. வழக்கம்போல புதுமுகங்களையே நடிக்க வைக்கிறார். கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசத்தில் படப்பிடிப்பை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முந்தையப் படங்களிலிருந்து வேறுபட்டு ஒரு த்ரில்லரை இந்தமுறை முயற்சி செய்கிறார்.

பாலாஜி சக்திவேலின் படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் கலெக்ஷனில் அவ்வளவாக சோபிப்பதில்லை. த்ரில்லர் படங்கள் இயல்பாகவே ஒரு சுவாரஸியத்தை தமக்குள் கொண்டிருப்பதால் விமர்சனரீதியாகவும், கலெக்ஷன்ரீதியாகவும் இந்த புதிய படம் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

விஜய் மில்டன் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்துக்கு ரா ரா ரா என்று பெயர் வைத்துள்ளார்.


வெப்துனியாவைப் படிக்கவும்