இஸ்லாத்தை பின்பற்றுவதற்காக பெருமைப்படுகிறேன்

திங்கள், 10 பிப்ரவரி 2014 (11:48 IST)
யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்தன. மதம் சம்பந்தப்பட்ட விஷயம்... கிசுகிசுவாக இருந்தாலும் தப்பாக இருந்துவிடக் கூடாது என்பதில் மீடியாக்கள் எச்சரிக்கையாக இருந்தன. இப்போது யுவனே தனது ட்விட்டர் செய்தியில் தனது இஸ்லாம் மாற்றத்தை வெளியிட்டிருக்கிறார்.
FILE

நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

யுவனின் மதமாற்றம் அறிந்ததும் உடனடியாக எழுந்த கேள்வி, இளையராஜா இதனை எப்படி எடுத்துக் கொள்வார் என்பதே. இளையராஜா ஹிந்து மதத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ரமண மகரிஷியின் பக்தர். அவர் யுவனின் மதமாற்றத்தை எப்படி எடுத்துக் கொண்டார்?

FILE
இந்தக் கேள்விக்கும் தனது ட்விட்டர் செய்தியில் யுவன் பதில் தந்துள்ளார். என் முடிவை எனது குடும்பத்தினர் ஆதரிக்கின்றனர். எனக்கும் என் தந்தைக்கும் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தை அவர் தழுவுவதற்கு, அவரின் இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்ததே காரணம் என்றும், மூன்றாவதாக ஒருவரை யுவன் திருமணம் செய்யவுள்ளார் எனவும் பேசப்பட்டது. யுவன் இதனை மறுத்துள்ளார். 3 வது திருமணம் எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தை பின்பற்றினாலும் யுவன் முஸ்லீமாக முறைப்படி மாறவில்லை. மாறுவதற்கான முயற்சியில் இருக்கிறார். என்றாலும் முஸ்லீம்களைப் போல ஐந்து நேரம் தொழுகை செய்கிறார். எக்காரணம் கொண்டும் தொழுகையை மட்டும் அவர் செய்ய தவறுவதில்லை.

முறைப்படி முஸ்லீமாக மாறி தனது பெயரையும் மாற்ற முடிவு செய்திருக்கிறாராம்.

மன நிம்மதிக்காகவே இல்லாத கடவுளை மக்கள் வணங்குகிறார்கள். அந்த நிம்மதி யுவனுக்கு இஸ்லாத்தில் கிடைத்தால் அதனை அவர் ஏற்றுக் கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எந்த மதத்தில் நிம்மதி கிடைக்கிறதோ அதனை சுவீகரித்துக் கொள்வதுதான் சரி.

யுவன் பாய்க்கு நமது வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்