ஏப்ரல் 11 கோச்சடையான் பத்து மொழிகளில் வெளியாகிறது

செவ்வாய், 4 பிப்ரவரி 2014 (11:52 IST)
கோச்சடையான் ஏப்ரல் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் பத்து மொழிகளில் வெளியாவதாக ஈரோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
FILE

ரஜினிகாந்த் நடித்திருக்கும் கோச்சடையான் ஒரு சரித்திரப் படம். வீர, தீர சாகஸங்கள் நிறைந்த கோச்சடையான் என்ற மன்னனை பற்றிய கதை. இதில் தந்தை, மகன் என இரு வேடங்களில் ரஜினி நடித்துள்ளார். ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா படத்தின் இயக்குனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் வைரமுத்து.

படத்தில் மகன் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனும், நடனத்தில் வல்லவரான தந்தைக்கு ஜோடியாக ஷோபனாவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், நாசர், ஆதி, ருக்மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

போட்டோ ரியலிஸ்டிக் பெர்ஃபாமென்ஸ் கேப்சர் டெக்னாலஜியில் உருவாகியிருக்கும் முதல் முழுநீள இந்தியப் படம் இது. இந்த தொழில்நுட்பத்தில்தான் அவதார், டின்டின் படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டன.

3டி அனிமேஷனில் தயாராகியிருக்கும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைந்து டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றன. அனைத்தும் முடிந்து ஏப்ரல் 11 படத்தை உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியிடுவதாக ஈரோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர்கள்தான் படத்தை தயாரித்து வெளியிடுகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, போஜ்புரி, ஆங்கிலம், ஃபிரெஞ்ச் மற்றும் ஜப்பான் மொழிகளில் நேரடியாக படத்தை வெளியிடுகின்றனர். ஆங்கில பதிப்பு உலகம் முழுவதும் வெளியிடப்படும் என்றும் ஈரோஸ் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஆறாயிரம் திரையரங்குகளில் படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர்.

2012 தீபாவளிக்கு கோச்சடையான் வெளியாகும் என்று முதலில் அறிவித்தனர். லண்டன் படப்பிடிப்பை முடித்து வந்த ரஜினி தீபாவளிக்கு முன்பே படம் வெளியாகும் என்றார். அன்றிலிருந்து இன்றுவரை பல ரிலீஸ் தேதிகளை அறிவித்துவிட்டனர்.

கடைசியில் 2013 தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றனர். பிறகு டிசம்பர் 12 ரஜினி பிறந்தநாளில் பாடல்களை வெளியிட்டு ஜனவரி 10 படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். விஜய், அஜித் படங்கள் கோச்சடையான் வெளியானால் ஓடாது என்பதால் ரஜினி பெரிய மனது வைத்து கோச்சடையானின் ரிலீஸ் தேதியை ஜனவரி 10 லிருந்து தள்ளி வைத்ததாக கூறினர். இப்போது ஏப்ரல் 11 என புதிய தேதியை அறிவித்துள்ளனர்.

ஆனால் முன்பு அறிவித்ததுக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. முன்பு படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் ரிலீஸ் தேதிகளை அறிவித்தார். இப்போதுதான் முதல்முறையாக ஈரோஸ் நிறுவனம் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

இந்தமுறையும் ரிலீஸை தள்ளி வைத்து ஏப்ரல் 11 ஐ முட்டாள்கள் தினமாக்காதீங்க... ப்ளீஸ்!

வெப்துனியாவைப் படிக்கவும்