பார்த்திபன், பியா நடிக்கும் இருமொழிப் படம்

சனி, 25 ஜனவரி 2014 (18:20 IST)
தமிழில் வெளியாகும் படத்தை மலையாள சேனல்கள் மலையாளத்தில் டப் செய்து ஒளிபரப்பும். ஆனால் திரையரங்குகளில் தமிழ்ப் படம் தமிழில்தான் திரையிடப்படும். தமிழ், மலையாளம் இருமொழிகளில் 2012 வரை எந்தப் படமும் தயாரானதாக (நமக்கு) நினைவில்லை.
FILE

தமிழ், மலையாளம் இருமொழிப் படங்களை நேரம் படம்தான் தொடங்கி வைத்தது. நிவின் பாலி, நஸ்‌‌‌‌ரியா நசிம் நடித்த இந்தப் படத்தை தமிழ், மலையாளம் இரு மொழிகளில் எடுத்தனர். தமிழ்ப் படத்தில் நடித்த பல நடிகர்கள் மலையாளத்தில் மாற்றப்பட்டனர். நாசர் நடித்த வேடத்தை மலையாளத்தில் மனோ‌ஜ் கே.ஜெயன் செய்தார். அதேபோல் ஜான் விஜய்யின் போலீஸ் கதாபாத்திரத்தை மலையாளத்தில் செய்தவர் வேறொருவர்.

பாலா‌ஜி மோகனின் வாய் மூடி பேசவும் படமும் தமிழ், மலையாளம் இரு மொழிகளில் தயாராகியிருக்கிறது. துல்கர் சல்மான், நஸ்‌ரியா நசிம் இதில் நடித்துள்ளனர்.

கேரளாவில் தமிழின் முன்னணி நடிகர்களின், இயக்குனர்களின் படங்கள் மட்டுமே திரையிடப்படும். இந்த இருமொழி கொள்கையால் சாதாரண நடிகர்களின் படங்களும் கேரளாவில் வெளியாகின்றன, வசூலிக்கின்றன. நேரம் படம் தமிழைவிட மலையாளத்தில் நன்றாக ஓடியது சின்ன உதாரணம்.
FILE

மலையாளியான ஹசிம் மரைக்கார் தான் இயக்கும் கேள்வி என்ற படத்தை இதேபோல் இரு மொழிகளில் இயக்குகிறார். பார்த்திபன், பியா கேள்வியில் நடிக்கின்றனர். மலையாள வெர்ஷனில் பார்த்திபனுக்குப் பதில் மனோ‌ஜ் கே.ஜெயன். மலையாளத்திலும் பியாதான் ஹீரோயின். கூடவே ஸ்வேதா மேனனும் இருக்கிறார்.

இந்த இருமொழிப் பட வ‌ரிசை நீண்டு கொண்டே செல்லும் என்றே தோன்றுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்