சிவாஜி சிலை - பிரபு, ராம்குமார் அறிக்கை

வெள்ளி, 24 ஜனவரி 2014 (18:02 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை சென்னை கடற்கரை சாலையில் உள்ளது. இந்தச் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக சர்ச்சை கிளம்பி பிரச்சனை கோர்ட்டுக்கு சென்றது நினைவிருக்கலாம்.
FILE

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிலையை இப்போது இருக்கும் இடத்திலிருந்து அகற்றி வேறு இடத்தில் வைத்துக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம் இறுதி முடிவெடுக்கும் பொறுப்பை அரசிடமே உயர்நீதிமன்றம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்...

FILE
சிவாஜியின் மகன்கள் பிரபுவும், ராம்குமாரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

"சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் பொறுப்பை அரசின் முடிவுக்கே விட்டிருக்கிறது.

நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மேல் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும் இது சம்பந்தமாக எந்தப் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ தற்போது செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

இது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புவோம். அதுவரை அமைதி காக்கும்படி எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவாஜி கணேசனின் குறிப்பிட்ட சிலையை அங்கிருந்து அகற்றுவதில் அரசு முனைப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்