கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகும் வீர தீர சூரன்

ஞாயிறு, 19 ஜனவரி 2014 (16:03 IST)
சுசீந்திரன் தனது வீர தீர சூரன் படத்தை கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கிறார். இதில் ஹீரோவாக விஷ்ணு நடிக்கிறார்.
FILE

சுசீந்திரனின் முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு கபடி விளையாட்டை மையப்படுத்தியது. விஷ்ணு அறிமுகமான படமும் அதுதான். சுசீந்திரனுக்கு மட்டுமின்றி படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் வெண்ணிலா கபடிக்குழு பெயர் வாங்கித் தந்தது. இன்று முன்னணியில் இருக்கும் நகைச்சுவை நடிகர் சூரிக்கும் பிள்ளையார் சுழி அந்தப் படமே.

ராஜபாட்டை படத்துக்கு முன்பே வீர தீர சூரன் படத்தை விஷ்ணுவை வைத்து இயக்குவதாக இருந்தார் சுசீந்திரன்.

விக்ரம் என்ற விலாங்கு மீன் கிடைத்ததும் வீர தீர சூரனை ஒதுக்கி வைத்து ராஜபாட்டையில் குதித்தார். தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர் படம். அடுத்து பாண்டிய நாடு. கமிட்மெண்ட்கள் முடிந்த நிலையில் மீண்டும் வீர தீர சூரனை கையிலெடுத்துள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு கபடியை மையப்படுத்தியது என்றால் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தியது. விஷ்ணு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். சுசீந்திரனின் ஆஸ்தான சூரியும் உண்டு. கடைசி இரு படங்களில் இடம்பெறாத யுவன் ஷங்கர் ராஜாவையும் இந்தமுறை கூட்டணி சேர்த்திருக்கிறார்.

வெண்ணிலா கபடிக்குழுவை பாராட்டியவர்களுக்கும் நெருடலாக அமைந்த விஷயம் கபடி போட்டியில் கடைபிடிக்கும் விதிமுறைகளை படத்தில் காற்றில் பறக்கவிட்டது. மாநில அளவிலான போட்டியின் இறுதிகட்டத்தில் புதிதாக ஒரு அணி போட்டியில் இடம்பெறுவதும், ஒரு அணியில் விளையாடிய வீரர் திடீரென இன்னொரு அணியில் சேர்வதும் எப்போதுமே நடக்காத காரியம்.

அதேமாதிரியான விதிமீறல்களை கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்தப் படத்திலாவது சுசீந்திரன் தவிர்ப்பார் என நம்புவோம். இதன் படப்பிடிப்பு சென்னையில் 18ஆம் தேதி தொடங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்