ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள், ட்ரெய்லர் வெளியீடு

சனி, 11 ஜனவரி 2014 (10:12 IST)
டிஜிட்டலில் மேம்படுத்தப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் சத்யம் சினிமாஸில் வெளியிடப்பட்டது.
FILE

பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்கு இன்றும் ஒருசாராரிடம் வரவேற்பு உள்ளது. சென்னையின் புறநகர் திரையரங்குகளில் இவர்கள் நடித்தப் படங்களை திரையிட்டு வாரத்திற்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம்வரை லாபம் பார்க்கும் சிறு விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். சென்னைக்கு வெளியேயும் இந்த வியாபாரம் பழுதில்லாமல் நடந்து வருகிறது.

இந்த வியாபாரத்தை கணக்கில் கொண்டு இந்த இரு நடிகர்கள் நடித்ததில் பிரபலமான படங்களை எப்போதாவது புதிய வெளியீடு போல விளம்பரம் செய்து பல திரையரங்குகளில் வெளியிடுவதுண்டு. அதையே சற்று வித்தியாசமாக படத்தை டிஜிட்டலில் மேம்படுத்தி கர்ணன் படத்தை தமிழகம் மற்றும் கர்நாடகாவில் திவ்யா பிக்சர்ஸ் வெளியிட்டது. படம் பம்பர்ஹிட். கோடிகளில் அள்ளினார் திவ்யா பிக்சர்ஸ் சொக்கலிங்கம். அட, இது ரொம்ப நல்லா இருக்கே என்று அவர் மேற்கொண்ட இன்னொரு முயற்சிதான் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்.

இன்று இந்தப் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியிடப்பட்டன. 48 வருடங்களுக்கு முன்பே வெளியாகி எல்லோர் மனதிலும் பதிந்து போன பாடல்களை மீண்டும் வெளியிடுவது சுத்த வியாபார தந்திரம். ஆனாலும் எம்ஜிஆர் அல்லவா. ட்ரெய்லரை இயக்குனர் பி.வாசு வெளியிட்டார். பாடல்களின் சிடியை சரத்குமார்.

கர்ணன் படத்தின் கலெக்ஷன் நன்கு தெரிந்தவர் என்பதால் விழா மேடையிலேயே பிசினஸ் பேசினார் சரத்குமார். சென்னை, திருநெல்வேலி, தஞ்சாவூர் பகுதியின் விநியோக உரிமையை எனக்கு தர வேண்டும் என்று பகிரங்கமாகவே கேட்டார். விதைத்துவிட்டு அறுவடையை சரத்குமாருக்கு தாரைவார்க்க சொக்கலிங்கம் ஒன்றும் சொக்கதங்கம் இல்லையே. சரி, மேடையிலேயே கேட்டுவிட்டார் என்பதால் சென்னை விநியோக உரிமையில் மட்டும் பிப்டி பிப்டி பார்ட்னராக சரத்குமாரை சேர்த்துக் கொள்வதாக வாக்குத் தந்தார்.

ஆக, விழா இனிதே நடந்தேறியது.

வெப்துனியாவைப் படிக்கவும்