விஜய்க்கு இந்த பிறந்தநாள் விசேஷம். வருங்கால அரசியல்வாதி என்ற அடையாளத்துடன் கொண்டாடப்படும் முதல் பிறந்ததினம்.
எழும்பூர் அரசு தாய், சேய் மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்து பெண் குழந்தைகளுக்கும் மனைவி சகிதம் சென்று மோதிரம் அணிவித்தார் விஜய். இந்த மருத்துவமனையில்தான் அவர் பிறந்தாராம். அதேபோல் கோடம்பாக்க அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிர யோகம் அடித்தது.
மாணவர்களுக்கு உதவிகள், கண் தானம், கண் சிகிச்சை முகாம், இலவச அன்னதானம், ரசிகர்கள் சந்திப்பு என நாள் முழுக்க களைகட்டியது. விஜய் படித்த பாலலோக் பள்ளியில் கண் தானத்துக்கான விண்ணப்பத்தை அவர் பூர்த்தி செய்து தந்தார். அவருடன் 100 ரசிகர்களும் கண் தானம் செய்தனர்.
சாலிகராமம் ஷோபா கல்யாண மண்டபத்தில் விஜய்-ரசிகர்கள் சந்திப்பு நடந்தது. இதற்காக ரசிகர்கள் திரள, பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கூட்டத்தில் சிலர் அதிமுக கொடிகளுடன் வந்தது ஆச்சரியம்.