இந்தியா சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஃபா) தூதராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக அறவித்துள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற ஐஃபா விழாவினை தமிழர்கள் கடுமையாக எதிர்த்ததையடுத்து, அவ்விழாவில் கலந்து கொள்ளாமல் அமிதாப் பச்சன் புறக்கணித்தார். அவருக்கு பதிலாக இந்தி நடிகர் சல்மான் கான் ஐஃபா தூதராக பொறுப்பேற்றார். ஆயினும் கொழும்பு ஐஃபா விழா படுதோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், டிவிட்டர் இணையத் தளத்தில், “ஐஃபாவிற்கு நாங்கள் வரவில்லை. எங்களுடைய சேவை ஐஃபாவிற்குத் தேவைப்படவில்லை” என்று அமிதாப் கூறியுள்ளார்.
“இந்த முடிவை நான் எடுக்கவில்லை... ஐஃபாவின் அடுத்த விழா நடக்கும் டோரண்டோவிற்கு நான் தேவையில்லை என்று ஐஃபா அமைப்பினர்தான் முடிவு செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
2000வது ஆண்டில் ஐஃபா விழா தொடங்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து அதன் தூதராக இருந்தவர் அமிதாப் என்பது குறிப்பிடத்தக்கது.