சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - வேட்டைக்காரன் முதலிடம்

செவ்வாய், 29 டிசம்பர் 2009 (15:53 IST)
பத்து தினங்களில் இரண்டு கோடியை தாண்டியிருக்கிறது வேட்டைக்காரன். சென்ற வாரம் வெளியான ஓடிப்போலாமா வசூல் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவு என்பது கவலைதரும் செய்தி.

5. ரேனிகுண்டா
மூன்று வாரங்கள் முடிவில் 70 லட்சங்களை மட்டுமே ரேனிகுண்டா வசூலித்துள்ளது. பத்தி‌ரிகைகள் படத்தின் தரத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டியும் ரசிகர்கள் கண்டுகொள்ளாதது, வித்தியாசமான முயற்சிகளுக்கு விடப்பட்ட சவால் என்றே சொல்ல வேண்டும். இதன் சென்றவார இறுதி மூன்று நாள் வசூல் 1.34 லட்சங்கள்.

4. பலம்
சிட்டிக்கு வெளியே முன்பே வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 1.82 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு வாரத்தை இந்தப் படம் தாக்குப் பிடிப்பதே கடினம் என்பதே உண்மை நிலவரம்.

3. ஓடிப்போலாமா
சந்தியா, ப‌ரிமள் நடித்திருக்கும் இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 3.5 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. பொங்கலுக்கு புதிய படங்கள் வெளியாகும் நிலையில் போட்ட பணத்தை வசூலிக்குமா என்ற ஐயத்தை ஓடிப்போலாமா ஏற்படுத்தியுள்ளது.

2. கந்தகோட்டை
நகுலனின் ஸ்டார் வேல்யூ எப்படி என்பதை சோதித்தறிய சிறந்த படம், கந்தகோட்டை. சன் பிக்சர்ஸின் தயவில்லாமல் வெளியாகியிருக்கும் முதல் படம். என்றாலும் சன் அளவுக்கு கந்தகோட்டைக்கு விளம்பரங்கள் கொடுத்து அசத்தி வருகிறார் தயா‌ரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம். இதன் ஒருவார வசூல் 34 லட்சங்கள். சென்ற வார இறுதி வசூல், 9.3 லட்சங்கள்.

1. வேட்டைக்காரன்
இந்த வருட்த்தில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படம், வேட்டைக்காரன். சென்ற வார இறுதியில் 59.15 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது. இதன் பத்து நாள் வசூல் 2.10 கோடிகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்