உன்னைப்போல் ஒருவன் - கமல் ரசிகர்கள் ஏமாற்றம்

புதன், 29 ஜூலை 2009 (18:36 IST)
1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் நாள் தமிழ் திரையுலகுக்கு முக்கியமான நாள். அன்றுதான் கமல்ஹாசனின் திரைப்பிரவேசம் நடந்தது. களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்தது அன்றைய தினம்தான்.

வரும் ஆகஸ்டு 12 ஆம் தேதியோடு கமல் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அந்த நாளை திருவிழாவாக கொண்டாட கமல் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். திருவிழா என்றால் தேரோட்டம் வேண்டுமே?

கமல் ரசிகர்கள் எதிர்பார்த்த தேரோட்டம், கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தின் ‌ரிலீஸ். படம் தொடங்கியபோது, ஜூலைக்கு முன்பாக படம் தயாராகிவிடும் என கமல் தரப்பில் கூறப்பட்டது.

பின்பு ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆகஸ்டு 12 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்றார்கள். ஆனால், பாவம் கமல் ரசிகர்கள். தேரோட்டம் இல்லாமலே திருவிழாவை நடத்த நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். திட்டமிட்டபடி ஆகஸ்டு 12 படம் திரைக்கு வரவில்லை.

டப்பிங் வேலைகள் முடியவில்லை, ரம்ஜானுக்குப் பிறகு படத்தை வெளியிடலாம் என சக கலைஞர்கள் நிர்பந்திக்கிறார்கள் என பல காரணங்கள் கூறப்படுகிறது. கந்தசாமி ஆகஸ்டு 15 வெளியாவதால் உன்னைப்போல் ஒருவனின் ‌ரிலீஸை தள்ளி வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

காரணம் எதுவாயினும் செப்படம்பர் மாதமே படம் திரைக்கு வருகிறதாம். கமல் ரசிகர்களுக்கு உண்மையிலேயே சோகமான செய்திதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்