பேரரசு படப்பெயர் மாற்றம்

புதன், 17 ஜூன் 2009 (15:58 IST)
தொடர் தோல்விகளால் தனது சென்டிமெண்டை சிறிது மாற்றியிருக்கிறார் பேரரசு. திருப்பாச்சியில் தொடங்கி திருவண்ணாமலை வரை தனது படங்களுக்கு ஊர் பெயர்களாக வைத்தவர், முதல் முறையாக அந்த ட்ரெண்டிலிருந்து மாறி தனது படத்துக்கு முரசு என்று பெயர் வைத்திருக்கிறார்.

திருவண்ணாமலைக்குப் பிறகு பரத்தை வைத்து திருத்தணி என்ற படத்தை தொடங்கயிருப்பதாக பேரரசு அறிவித்து ஆறு மாதமாகிறது. படத்தை தானே தயா‌ரிப்பதுடன் இசையும் நானே என ஆர்மோனியப் பெட்டியை வைத்து கம்போஸிங்கும் தொடங்கினார். நடுவில் திருத்தணிக்குப் பதில் திருமங்கலம் என படத்தின் பெயரை மாற்றுவதாக அறிவிப்பு வந்தது.

இதன் நடுவில் விஜய்யின் ஐம்பதாவது படத்தை இயக்குகிறவர்கள் பட்டியலில் பேரரசு‌வின் பெயரும் அடிபட்டது. அவரும் திருத்தணியை ஓரம்கட்டி விஜய் படத்துக்காக காத்திருந்தார். ஆனால், சம்பள பேரம் எதிர்பார்ததபடி அமையாததால் மீண்டும் திருத்தணிக்கே திரும்பியிருக்கிறார்.

இந்த சின்ன கேப்பில் நிறைய மாற்றங்கள். பேரரசுக்கு பைனான்ஸ் பிரச்சனை இருப்பதால் திருத்தணியின் தயா‌ரிப்பு பொறுப்பு இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் கைமாறியிருக்கிறது. அதேபோல் படத்தின் பெயரையும் முரசு என்று மாற்றியிருக்கிறார் பேரரசு. அப்படியே வழக்கமான சினிமா ஃபார்முலாவையும் மாற்றினால் பேரரசுக்கு வெற்றி நிச்சயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்