ஆஸ்கர் விருது சில சர்ச்சைகள்

செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (13:58 IST)
ஸ்லம்டாக் மில்லியனர் படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றியதை உலக அதிசயமாக இடைவிடாமல் ஒளிபரப்பின வட இந்திய ஆங்கில செய்தி ஊடகங்கள். ஸ்லம்டாக் மில்லியனரின் வெற்றியை தங்களது சொந்த வெற்றியாக கொண்டாடும்படி இந்தியர்கள் இந்த ஊடகங்களால் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்தியர்களான ஏ.ஆர். ரஹ்மானும், ரெசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் விருது பெற்றது சரித்திர சாதனை என்பதில் ஐயமில்லை. அதேநேரம், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மற்ற ஆறு விருதுகளுக்கும் சேர்த்து இந்தியர்கள் சந்தோஷ­ம் கொண்டாடுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆஸ்கர் விருதின் பூர்வீகம் அறிந்த கமல்ஹாசன் வார்த்தைகளை தேர்ந்தெடுத்தே ரஹ்மானை பாராட்டியிருக்கிறார். அமெரிக்கர்கள் தங்களது சினிமாவுக்கு அளிக்கும் விருதான ஆஸ்கரை அமெரிக்க படத்தில் வேலை செய்து பெற்றிருக்கிறார் ரஹ்மான் என்று தெளிவுபட கூறி அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் இந்தியாவில் தயாரான படம் என்றாலும் அது இந்திய படம் அல்ல. அப்படியிருக்க அப்படத்துக்கு எட்டு ஆஸ்கர் விருது கிடைத்ததுக்காக ஏன் இந்தியர்களும், இந்தி மீடியாக்களும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார், முகேஷ்பட்.

ஸ்லம்டாக் மில்லியனர் போலவே அதிக ஆஸ்கர் விருதுகளை குவித்த படம் லார்ட் ஆஃப் தி ரிங். இப்படம் நியூசிலாந்தில் தயாரானது என்றாலும் இதுவொரு அமெரிக்க தயாரிப்பு. ஆஸ்கர் விருது இப்படத்துக்கு கிடைத்தபோது, நமது படத்துக்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது என்று நியூசிலாந்துக்காரர்கள் பட்டாசு வெடிக்கவில்லை. இதையும் முகேஷ்பட்டே கூறியிருக்கிறார்.

அதேபோல் அமிதாப்பச்சனும் இந்தியாவை சிறந்த முறையில் வெளிப்படுத்திய படம் ஸ்லம்டாக் மில்லியனரா அல்லது டெல்லி 6 படமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

விருது கிடைத்த சந்தோ­ஷத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டிய கசப்பு மாத்திரைகள் இந்தக் கேள்விகள் என்பதில் ஐயமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்