நான் கடவுள் - இசை விமர்சனம்

செவ்வாய், 13 ஜனவரி 2009 (18:31 IST)
இளையராஜஇசையில் நான் கடவுள் பாடல்கள் பரவசமூட்டும் அனுபவம். மனசை ஓர்மைப்படுத்தும் ராகாலாபானை. செம்புல நீராக நெஞ்சோடு கரையும் இசை சாகரம்.

‘கண்ணில் பார்வை...’ ஸ்ரேயா கோஷல் குரலில் சோகத்தின் சுகந்தம் கிளப்புகிறது. வாழ்வின் கையறு நிலையை பிரதிபலிக்கும் வ‌ரிகள். கண் மூடி கேட்டால் செஞ்சில் ஈரம் கசியும்.

‘மாதா உன் கோயிலில்..’ அச்சாணி படத்தில் எ‌ஸ். ஜான‌கி குரலில் கேட்டு பரவசமடைந்த பாடல். மதுமிதாவின் மதுரக் குரலில் கேட்கும்போதும் இனிக்கிறது. சட்டென்று பல்லவியோடு முடிவது சின்ன ஏமாற்றம்.

அதே மெட்டில் வரும் ‘அம்மா உன் பிள்ளை நான்...’ சாதனா சர்கத்தின் இனிமை ததும்பும் குரலில் இதயம் தொடும் மற்றொரு பாடல்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் ராஜஎழுதி இசையமைத்த ‘பிச்சைப்பாத்திரம்...’ மதுபாலகிருஷ்ணனின் குரலில் காதில் தேன் பாயும் இசையமுதம்.

ஹரஹர கோஷத்துடன் தொடங்கும் ‘ஓம் சிவயோகம்...’ உடுக்கையும், உறுமியும் சேர்ந்த நரம்பை சுண்டி இழுக்கும் ருத்ரதாண்டவம்.

இளையராஜகுரலில் ‘காற்றில் அலையும் சிறகு..’ இதயத்தை பிசையும் இன்னொரு இசைத்தாலாட்டு. வீதி என்றொரு வீடு, வானம் என்றொரு கூரை போன்ற வ‌ரிகள் பாடலின் கனத்தை கூட்டுகிறது.

ஆன்மிகத்தின் வெளிப்பாடு இசையென்றால், அதனை அனுபவிக்க சிறந்த வழி நான் கடவுள் இசைக்கு செவிமடுப்பது. வயிற்றுக்கு உணவுள்ளபோதும் எடுத்துக் கொள்ளலாம் இந்த செவிக்குணவை.

வெப்துனியாவைப் படிக்கவும்