பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தினம் ஐந்து காட்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நேற்று முறைப்படி அறிவித்தது.
தீபாவளி, பொங்கல் போன்ற அதிக திரைப்படங்கள் வெளியாகும் பண்டிகை காலங்களில் தினம் ஐந்து காட்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்குவது வழக்கம். அதன்படி இந்த பொங்கலுக்கும் தினம் ஐந்து காட்சிகளை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஜனவரி 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஏழு தினங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. டூரிங் டாக்கீஸ்களில் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை ஐந்து தினங்கள் காலை காட்சி நடத்தவும், ஜன. 19 மற்றும் 20 தேதிகளில் மதிய காட்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சலுகை வழக்கம்போல் இருந்தாலும் இந்தமுறை வழக்கத்தைவிட குறைவான திரைப்படங்களே பொங்கலுக்கு வெளியாக உள்ளன. குறைவு என்றால் மொத்தம் மூன்று திரைப்படங்கள் மட்டுமே வெளியாகின்றன.