இயக்குனர் சங்க உறுப்பினர்கள் மட்டுமே இனி படம் இயக்க முடியும்
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:11 IST)
''தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினராக இருந்தால்தான் தமிழ் படம் இயக்க முடியும்'' என்று சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. சங்க தலைவர் பாரதிராஜா, பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன், துணை தலைவர்கள் விக்ரமன், சசி மோகன், இணைச் செயலாளர்கள் லிங்குசாமி, அமீர், சண்முக சுந்தரம், ஏகாம்பவாணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை இயக்குனர் கே.பாலசந்தர் அறிமுகம் செய்து வைத்து வாழ்த்தினார்.
இதன் பிறகு பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், 35 ஆண்டு சினிமா சரித்திரத்தில் இப்போதுதான் முதன்முறையாக 1200 பேர் சங்கத்தில் உறுப்பினராக விண்ணப்பம் பெற்றிருக்கிறார்கள். இனிமேல், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே தமிழ் படங்களில் பணிபுரிய முடியும்.
இந்த நிபந்தனை உடனடியாக அமலுக்கு வருகிறது. வரும் பொங்கல் முதல் உதவி இயக்குனர்களுக்கு சங்க வழியில் சம்பளம் வழங்கப்படும். இதற்கு தயாரிப்பாளர் சங்கம், பெப்சி ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், கலைப்புலி ஜி.சேகரன், ராதாரவி, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.