இன்று மூன்று படங்கள் ‌ரிலீஸ்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:57 IST)
2008 தமிழ் சினிமாவுக்கு ராசியில்லாத வருடம். இதுவரை வெளியான 105 நேரடி தமிழ்ப் படங்களில் எட்டு படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது, திரையுலகம் உட்கார்ந்து யோசிக்க வேண்டிய விஷயம்.

இந்த குறைவான வெற்றி விகிதம் கோடம்பாக்கத்தில் சோர்வை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இன்று மூன்று முக்கியமான திரைப்படங்கள் வெளியாகின்றன.

குசேலன் தோல்விக்குப் பிறகு கவிதாலயா தயா‌ரிப்பில் உருவான பேரரசின் திருவண்ணாமலை இன்று வெளியாகிறது. அர்ஜுன் இதில் லோக்கல் டி.வி. சானல் நடத்துகிறவராக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை. பாடல்கள் பேரரசு. வழக்கமான தனது கமர்ஷியல் பாணியில் படத்தை எடுத்திருக்கிறார் பேரரசு.

மொழி படத்துக்குப் பிறகு ராதாமேகன் இயக்கியிருக்கும் அபியும் நானும் இன்று திரைக்கு வருகிறது. டூயட் மூவிஸ் தயா‌ரித்த படங்களில் லாபம் சம்பாதித்து கொடுத்த ஒரே படம் ராதாமோகனின் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா, மகள் உறவை பேசும் அபியும் நானும் படத்தில் அப்பாவாக பிரகாஷ்ராஜும், மகளாக த்‌ரிஷாவும் நடித்துள்ளனர். பிரகாஷ்ரா‌‌ஜின் மனைவியாக ஐஸ்வர்யா நடித்துள்ளார். வித்யாசாக‌ரின் இசையும், வைரமுத்துவின் பாடல்களும் படத்தின் முக்கியமான அம்சம்.

மலையாள நடிகர் கம் இயக்குனர் சீனிவாசனின் வடக்கு நோக்கி எந்திரத்தின் தமிழ் ‌‌‌ரீ-மேக்கான திண்டுக்கல் சாரதி இன்று வெளியாகிறது. கருணாஸ் முதல் முறையாக ஹீரோவாகியிருக்கும் படம். நம்நாடு கார்த்திகா ஹீரோயின்.

மனைவியை சந்தேகப்படும் கணவனைப் பற்றிய படம் என்பதால் பெண்க‌ள் கூட்டம் அம்மும் என்பது படக்குழுவின‌ரின் நம்பிக்கை. படத்தின் உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கி உள்ளதால் படத்தின் ஓபனிங் குறித்த கவலை இல்லை. விளம்பரம் போட்டே அரங்கை நிறைத்துவிடுவார்கள்.

இந்த மூன்று படங்கள் தவிர சிம்புவின் சிலம்பாட்டம் நேற்று வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் இறுதி நம்பிக்கைகள் இந்தப் படங்கள் என்பதிலிருந்து இவற்றின் முக்கியத்துவத்தை பு‌ரிந்து கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்