இயக்குனர்கள் சங்கத்துக்கு நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் பாரதிராஜா தலைமையிலான அணி அமோக வெற்றிபெற்றது. சங்கத்தின் தலைவராக 363 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், பாரதிராஜா.
தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த எஸ்.ஏ. சந்திரசேகரனின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து சங்கத்துக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. பாரதிராஜாவை தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்க நடிந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
அவருக்கு எதிராக தேர்தலில் நின்றார் இயக்குனர் ஆர்.சி. சக்தி. கடைசி நேரத்தில் உதவி இயக்குனர்கள் நாளைய இயக்குனர்கள் அணி என்ற பெயருடன் தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்கியதால் தேர்தல் சூடு பிடித்தது.
இந்நிலையில் தேர்தலுக்கு முதல் நாள் சில இயக்குனர்கள் தாக்கப்பட்டனர். இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தலை என்று நடத்துவது என்பதை முடிவு செய்ய நடந்த கூட்டத்தில் தேதியை முடிவு செய்வதற்கு பதிலாக, சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை தேர்ந்தெடுத்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் ஆர்.சி. சக்தி. வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிராஜாவை தேர்ந்தெடுத்தது செல்லாது என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று சங்கத்துக்கு முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது.
காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு இரவே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாரதிராஜா 511 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆர்.சி. சக்திக்கு 148 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பொதுச் செயலாளராக ஆர்.கே. செல்வமணி வெற்றி பெற்றார்.
அவருக்கு கிடைத்த வாக்குகள் 487. அவரை எதிர்த்து போட்டியிட்ட புகழேந்தி தங்கராஜுக்கு 110 ஓட்டுகளே கிடைத்தன. பொருளாளராக ஆர். சுந்தர்ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிடைத்த வாக்குகள் 306. அவரை எதிர்த்து போட்டியிட்ட வி. சேகருக்கு கிடைத்த வாக்குகள், 266.
துணைத் தலைவராக விக்ரமனும், சசிமோகனும் தேர்வு செய்யப்பட்டனர். 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வும் நேற்று நடந்தது.
தேர்தல் வெற்றியை பாரதிராஜா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.