ஈழத்தமிழருக்காக திரையுலகினர் போராட்டம்!

திங்கள், 13 அக்டோபர் 2008 (16:12 IST)
ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கும் பொருட்டு ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தப் போவதாக திரையுலகினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்த ஆலேசனை‌க் கூட்டம் நேற்று பிலிம் சேம்பரில் நடந்தது. தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்ஸி தொழிலாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்து சங்க நிர்வாகிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணனும், இயக்குனர் பாரதிராஜாவும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கைவிடக் கோரியும், ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு அனைத்து உதவிகளும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த‌ப் போராட்டத்தை முன்னிட்டு அனைத்து பட‌ப்பிடிப்புகளும் வருகிற 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறாது எனவும் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். திரையுலகு சம்பந்தப்பட்ட எந்த வேலையும் அன்று நடைபெறாது.

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்வரை கறுப்பு பேட்ஜ் அணிவது தொடரும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்