அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். மன்மதன் படத்தில் அஜித் வாழ்க என்று சிம்பு கோஷமிட்டதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
நேரடி பேட்டிகளிலும் அஜித் மீதுள்ள பிரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சிம்பு. தான் நடிக்கும் சிலம்பாட்டம் படத்தில் அஜித் ரசிகராக சிம்பு நடிக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல்.
இந்தப் படத்தை சரவணன் இயக்குகிறார். சிம்பு ஜோடியாக சனா கான் மற்றும் சினேகா நடிக்கின்றனர். யுவன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் பிராமண இளைஞராக நடித்துள்ளார் சிம்பு. பிளாஷ்பேக் காட்சியில் அவர் யார் என்கிற உண்மை தெரியவரும். இதில் அஜித் ரசிகராக சில காட்சிகளில் சிம்பு நடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பந்தயம் படத்தில் விஜய் ரசிகராக நடித்துள்ளார் நிதின் சத்யா. ஏற்கனவே வசீகராவில் எம்.ஜி.ஆர். ரசிகராக நடித்திருக்கிறார் விஜய்.
அடுத்தவர்களின் ரசிகராக நடிப்பதும் ஆரோக்கியமான விஷயம்தான்.