சத்ரியனுக்கு சாவு இல்லைடா! குத்துபட்டு, குண்டடிபட்டு கடலில் கட்டி எறிந்த பிறகு உயிரோடு வந்து விஜயகாந்த் அடிக்கும் பன்ச் டயலாக். என்ன காரணத்துக்கு வைத்தார்களோ, சத்ரியன் பெயர் கிருஷ்ணகாந்துக்கு அம்சமாக பொருந்துகிறது.
மன்மதன் படத்தை எடுத்து மீள முடியாத கடனில் அகப்பட்ட இந்தியன் தியேட்டர்ஸ் கிருஷ்ணகாந்தை நினைவிருக்கிறதா? மன்மதனகுக்குப் பிறகு இவர் தயாரித்த சொல்லி அடிப்பேன் இன்னும் பெட்டிக்குள் பூசணம் பிடித்து கிடக்கிறது.
இந்த ஒட்டடை சம்பவங்களை ஒதுக்கி வைத்து மீண்டும் படத் தயாரிப்பில் தைரியமாக இறங்கியிருக்கிறார் கிருஷ்ணகாந்த். இவரது பாதி தைரியத்துக்கு சொந்தக்காரர் இயக்குனர் மணிமாறன். இவர் சொன்ன கதையில் நம்பிக்கை வைத்தே இம்முறை தயாரிப்பு கயிற்றில் கழுத்தை நீட்டியிருக்கிறார்.
படத்திற்கு சத்ரியன் என்று பெயர் வைத்தாலும், பழைய விஜயகாந்தின் சத்ரியனுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லையாம். சாய் என்ற சா·ப்ட்வேர் இன்ஜினியர் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
அந்த சத்ரியனுக்கு சாவு இல்லை. இந்த சத்ரியனுக்கு கடன் இல்லாமல் இருந்தாலே போதுமானது!