ஒரு படம் தொடங்குவதற்கு முன்பும், படம் வெளியான பிறகும் திருப்பதி செல்வது ரஜினியின் வழக்கம். குசேலன் வெளியானதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தார் ரஜினி.
கோயில் நிர்வாகிகள் அவரை வரவேற்று, விவிஐபி-களுக்கான ஸ்பெஷல் நுழைவாயில் வழியாக அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தவர், வெளியே வந்ததும் நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்.
கன்னட மக்களிடம் ரஜினி வருத்தம் தெரிவித்ததையும், அதைத் தொடர்ந்து தமிழகத்தில் சில இடங்களில் அவரது குசேலன் பட பேனர் கிழிக்கப்பட்டதையும் குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ரஜினி பதிலளிக்க மறுத்தார். குசேலனும் அதன் தெலுங்கு பதிப்பு கதாநாயகடுவும் நன்றாக போய்க் கொண்டிருப்பதாகவும், குசேலன் வெற்றி பெற்றால் திருப்பதி வருவதாக வேண்டியிருந்தேன். வேண்டுதலை நிறைவேற்றவே இப்போது வந்தேன் என்றார் ரஜினி.
ரோபோ குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், இன்னும் ஐந்து நாட்களில் ரோபோவுக்காக அமெரிக்கா செல்வதாக தெரிவித்தார். ஐஸ்வர்யா ராயுடன் நீங்கள் நடிக்கும் பாடல் காட்சி அமெரிக்காவில் எடுக்கப்படுகிறதா என்ற நிருபரின் கேள்விக்கு, அது டைரக்டரின் சாய்ஸ் என்று கூறி, காரில் ஏறி கிளம்பினார் ரஜினி.
சிவாஜி ரிலீசுக்குப் பின் திருப்பதி வந்தபோது ரஜினியிடம் இருந்த உற்சாகம் இப்போது மிஸ்ஸிங். கோயில் நிர்வாகிகளுக்கே அதில் வருத்தம்தான்.