ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஆதரித்து தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில், இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டாமா என்று உணர்ச்சிவசப்பட்டார் ரஜினி.
இது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிலிருந்து, ரக்சண வேதிகே அமைப்பினர் வரை எரிச்சல் படுத்தியது. ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை, கர்நாடகாவில் அவர் நடித்த படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என கச்சை கட்டியது ரக்சண வேதிகே அமைப்பு.
குசேலன் படத்தின் ஆடியோ வெளியான நிலையில் படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் கர்நாடகாவில் நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் ஒரே நோக்கத்துடன் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் முன் திரண்ட ரக்சண வேதிகே அமைப்பினர், ரஜினியின் புகைப்படத்தை எரித்ததோடு அவருக்கெதிராக கோஷம் எழுப்பினர்.
திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளிடம், குசேலனை திரையிட அனுமதிக்கக் கூடாது என அவர்கள கடிதமும் அளித்தனர். தற்போது கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக, சபரிமலை சர்ச்சையில் சிக்கிய நடிகை ஜெயமாலா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.