மகேந்திரன் பாராட்டிய புத்தகம்!

செவ்வாய், 15 ஜூலை 2008 (19:39 IST)
டூயட் பாடல்கள் மீது இயக்குனர் மகேந்திரனுக்கு உள்ள கோபம் இன்னும் தணியவில்லை. சென்னையை தொடர்ந்து கோவையில் நடந்த விழா ஒன்றிலும் டூயட் பாடல்களை சினிமாவில் கைவிடுங்கள் என கேட்டுக் கொண்டார்.

கோவையில் இயங்கிவரும் நாய் வால் திரைப்பட இயக்கம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் நூற்றாண்டு விழாவுடன், அஜயன் பாலாவின் பெரியார் புத்தக வெளியீட்டு விழாவையும் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் கொளத்தூர் மணி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினார். அதற்குமுன் என்.எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் காட்சிகள் திரையிடப்பட்டன.

கலைவாணர் போன்ற ஒரு கலைஞன் இனி எக்காலத்திலும் தோன்றமாட்டான் என்றார் மகேந்திரன். அஜயன் பாலாவின் பெரியார் புத்தகம் குறித்துப் பேசும்போது, வார இதழில் தொடராக வந்தபோதே அதனை வாசித்ததாகவும், பொதுவாக இப்படிப்பட்ட ஆக்கங்களில் காணப்படும் சுவாரஸ்யமின்மை அஜயன் பாலாவின் எழுத்தில் இல்லையென்றும், சுருக்கமாகவும், சிறப்பாகவும் இருந்தது என்றும் கூறினார்.

இந்திய திரைப்படங்களில் இடம்பெறும் டூயட் பாடல்கள் மீதான அதிருப்தியையும் தனது பேச்சில் வெளிப்படுத்தினார் மகேந்திரன். டூயட்களை தடை செய்ய வேண்டும் என்ற அவரது கோபம் பார்வையாளர்களுக்கு நியாயமாகவே தோன்றியது. தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அப்படி தோன்றும்போது சினிமாவுக்கு விமோசனம் கிடைக்கலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்