'ஆடி'ப்போன திரையுலகம்!

செவ்வாய், 15 ஜூலை 2008 (19:34 IST)
ஃபிலிம் இல்லாமல் படமெடுப்பார்கள். ஆனால் பூசணிக்காய் இல்லாமல் தமிழ் திரையுலகில் எந்தப் படமும் எடுக்கப்படுவதில்லை. பூஜை, புனஸ்காரம், ஜோஸியம், சென்டிமெண்டில் தமிழ் திரையுலகம் ஒரு ஆன்மிக மடம்.

ஆடியில் படத்தை தொடங்கினால் ஆகாது என்பது சென்டிமெண்ட். இதனால் ஆணி மாதத்தின் கடைசி நல்ல நாளான நேற்று (14.07.2008) கோடம்பாக்கத்தில் ட்ராஃபிக் ஜாம். மொத்தம் பதினேழு படங்களுக்குப் பூஜை. திரை நட்சத்திரங்களில் ஏவி.எம்.-மே வீங்கிவிட்டது.

ஷக்தி சிதம்பரம் லாரன்சையும், ஆறு நாயகிகளையும் வைத்து இயக்கும் ராஜாதிராஜா படத்தின் பூஜை நேற்று ஏவி.எம்.-மில் நடந்தது. ஆறு ஹீரோயின்கள். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொண்டதால் பூஜையில் பெருங்கூட்டம்.

இதே ஸ்டுடியோவில் டி.பி. கஜேந்திரனின் மகனே என் மருமகனே படத்துக்குப் பூஜை. விடியும் வரை காத்திரு பூஜைக்கு ரம்பா, குஷ்பு வந்திருந்தனர். படத்தில் இருவருமே நடிக்கின்றனர்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் அளவுக்கு மீறிய கூட்டம் என்பதால் அதே நேரம் அதே இடம் படத்தின் பூஜை வளசரவாக்கத்தில் நடந்தது.

நவீனனின் உச்சகட்டம், புவனேஷின் ஆறாவது வனம், ஜெயபாலின் மாமல்லன் ஆகியவை நேற்று பூஜை போடப்பட்ட படங்களில் சில. கதையும், பெயரும் தயாராகாத நிலையில் புரொடக்சன் நம்பரை போட்டும் சில படங்களுக்கு பூஜை போட்டனர்.

சுருக்கமாகச் சொன்னால், ஆடி சென்டிமெண்டால் ஆடிப் போனது திரையுலகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்