சத்யராஜ் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளி, 27 ஜூன் 2008 (11:25 IST)
அவதூறாகப் பேசியதாக நடிகர் சத்யராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்த பரங்கிப்பேட்டை நீதிமன்றமஉத்தரவு பிறப்பித்தது.

கடலூர் மாவட்ட காங்கிரஸ் பிற்பட்டோர் பிரிவு தலைவரும், விவசாய சங்கத் தலைவருமான கே.ஜி.குமார் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு‌வி‌ல், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரி திரைப்பட நடிகர்கள் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

அப்போது நடிகர் சத்யராஜ், இந்திய இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் கேடு விளைவிக்கும் வகையிலும், இனவெறி மற்றும் மொழி வெறியைத் தூண்டுகிற வகையிலும் பேசினார். இதனை தொலைக்காட்சியில் பார்த்து நானும், எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தோம்.

இதுகுறித்து நடிகர் சத்யராஜ் பதிலளிக்கக் கோரி வழக்கறிஞர் மூலமாக 5.4.2008-ல் தா‌க்‌கீடு அனுப்பப்பட்டது. அதனை 9-4-2008-ல் பெற்றுள்ளார். ஆனால் இன்று வரை அவர் பதில் தெரிவிக்கவில்லை.

எனவே இம்மனுவை புவனகிரி காவல் துறையினருக்கு அனுப்பி நடிகர் சத்யராஜ் மீது வழக்குப் பதிந்து புலன் விசாரணை செய்து சத்யராஜ் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூறியுள்ளார்.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரணை‌க்கு ஏ‌ற்று‌க் கொ‌ண்ட நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர், புவனகிரி காவல்நிலைய ஆய்வாள‌ர், நடிகர் சத்யராஜ் மீது வழக்குப் பதிவு செய்து ஜூலை 17ஆம் தேதிக்குள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்