வெள்ளித்திரையில் வீரப்பன் கதை!
செவ்வாய், 17 ஜூன் 2008 (19:54 IST)
இறுதியில் சந்தன வீரப்பனும் வெள்ளித் திரைக்கு வருகிறார். வீரப்பனின் சாகசக் கதையைத் திரைப்படமாக்கப் பலர் முயன்றனர். வீரப்பனை வில்லனாக்கி விடுவார்கள் என்று அந்த முயற்சிகளுக்குத் தடையிட்டார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. தானே திரைப்படம் எடுக்கவும் அவர் முயன்றது தனிக்கதை. இதில் ஒரு கிளைக் கதையாக நடிகர் பிரகாஷ் ராஜையும் சந்தித்தார்.
இந்த நெடிய ஓட்டம் தொடங்கிய இடத்திற்கே வந்தபோது, திடீர் திருப்பமாக மும்பையில் இயக்குநர் ராமகோபால் வர்மாவை சந்தித்தார் முத்துலட்சுமி. வர்மா வீரப்பனின் கதையைத் திரைப்படமாக்க ஏற்கெனவே திட்டம் வைத்திருந்தார். வர்மா படத்தை எடுப்பதென்றால் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று இந்தச் சந்திப்பில் கூறியிருக்கிறார் முத்துலட்சுமி.
அவர் ஒரு போல்ட் லேடி என்று முத்துலட்சுமியைப் புகழ்ந்திருக்கும் வர்மா, முதல் சந்திப்பில் நிறைய பயனுள்ள தகவல்களை அவர் கூறியதாகவும், முக்கியமாக வீரப்பனை முத்துலட்சுமி காதலித்த கதையை விவரித்ததாகவும் கூறினார்.
படத்தை ஏக்தா கபூருடன் இணைந்து வர்மாவின் கம்பெனி நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறவர் பிரஷாந்த் பாண்டே. வர்மாவின் சர்க்கார் ராஜ் திரைப்படத்தின் கதாசிரியர்.
வீரப்பன் எப்படி ஒரு மாநிலத்தின் தேடப்படும் குற்றவாளியாக மாறினான் என்பதுடன், அவனைக் கொன்றவர்கள் பற்றியும் படம் பேசும் என்று கூறினார் வர்மா. வீரப்பனைப் பற்றிய சந்தனக்காடு தொடரைச் சகித்துக்கொள்ள முடியாத காவலர்கள் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ.