தசாவதாரம் ஓபனிங் - திரையரங்கு உரிமையாளர் மகிழ்ச்சி!
சனி, 14 ஜூன் 2008 (17:34 IST)
உலகம் முழுவதும் நேற்று தசாவதாரம் வெளியானது. நான்கு நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டதால் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல்.
முன்பதிவு செய்ய வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு திரையரங்கிலும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். தடியடி நடத்த வேண்டிய அளவுக்கு பெரும் கூட்டம்.
படத்தின் ஓபனிங் மற்றும் முன்பதிவு குறித்து அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நூறு சதவீத திருப்தி.
"சென்னையில் மட்டும் 21 தியேட்டர்ல தசாவதாரம் ரிலீஸாயிகியிருக்கு. அப்படியும் கூட்டத்துக்கு குறைவில்லை. அமேசிங் ஓபனிங். ஆறு நாட்களுக்கான ரிசர்வேஷன் ஏற்கனவே முடிஞ்சிருச்சி" என்றார் சென்னை கமலா திரையரங்கு உரிமையாளர் வள்ளியப்பன். கமலா திரையரங்கு சென்னையிலுள்ள பெரிய திரையங்குகளில் ஒன்று. ஏறக்குறைய ஆயிரம் இருக்கைகள்.
தசாவதாரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
"சும்மா வந்துபோற நடிகர்களுக்கிடையில் கமலின் உழைப்பும் நடிப்பும் பிரமிக்க வைக்குது. இதில் வில்லனாக வர்ற வெள்ளைக்கார கமலைப் பாருங்க. எந்த இடத்திலாவது கமலோட ஜாடை, மேனரிஸம் ஏதாவது தெரியுதா? உண்மையிலேயே ஃபென்டாஸ்டிக் மூவி" என்றார் வள்ளியப்பன்.
வெளியே நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது, தமிழ் சினிமா சரித்திரத்தில் தசாவதாரம் சாதனை படைக்கும் என்ற அவரது வார்த்தை உண்மையாகும் என்றே தோன்றியது.