நடிகையின் தத்துவம்!

புதன், 4 ஜூன் 2008 (20:06 IST)
கேரளாவில் மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த கோபிகாவை தமிழுக்கு கொண்டு வந்தவர் சேரன். அவரின் 'ஆட்டோகிராஃப்' படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடிக்க வைத்தார்.

அதன்பிறகு 'கனா கண்டேன்' கே.வி. ஆனந்த் இயக்கிய படத்திலும், திருமுருகன் இயக்கிய 'எம்டன் மகன்' மற்றும் சில படங்களில் நடித்தார். அதற்குப்பின் சரியான வாய்ப்புகள் வராத காரணத்தால் தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். தற்போது அயர்லாந்தில் வசித்து வரும் டாக்டரை மணந்தபின் அங்கேயே சென்று செட்டிலாகவும் திட்டமிட்டிருக்கிறார்.

இந்த திடீர் திருமண அறிவிப்புக்கான காரணத்தை கேட்க, 'சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் தாண்டி குடும்ப வாழ்க்கை உள்ளது. கணவன் - குழந்தைகள் என்று ஆயிரம் சந்தோஷங்கள் இருக்கிறது அதையெல்லாம் அனுபவிக்கப் போகிறேன். நான் சினிமாவில் பெரிய அளவுக்கு வந்து நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று என்றுமே நினைத்ததில்லை. ஏதோ கொஞ்ச காலம் சினிமாவில்தான் நடிப்பமே என்றதான் வந்தேன், அதன்படி நடித்துவிட்டேன்' என்று தத்துவ மழையாகப் பொழிகிறார் கேரளத்துப் பைங்கிளி.

எல்லாம் சீச்... சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதைதான். ஜூலை 13 ஆம் தேதி கிறித்துவ முறைப்படி கேரளாவில் திருமணம் நடைபெறவுள்ளது. வாழ்த்துக்கள் கோபி.

வெப்துனியாவைப் படிக்கவும்