ஷங்கரின் லட்சியப் படம்!

செவ்வாய், 3 ஜூன் 2008 (20:10 IST)
கதை விவாதம் முடிந்து 'ரோபோ'வை இயக்கத் தயாராகிவிட்டார் இயக்குனர் ஷங்கர். அவரின் லட்சியப் படமான இதை இயக்கவேண்டுமென்பது நீண்ட நாளைய கனவு. அது தற்போது நிஜமாகியுள்ளது.

இதற்கான ஆரம்ப விழா மிகவும் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ள இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளனர்.

'சிவாஜி' படத்தைவிட ரஜினியை இன்னும் இளமையாகக் காட்ட ஹாலிவுட் மேக்கப்மேன்கள் வரவிருக்கின்றனர். அத்தோடு கேரளாவில் உள்ள கோட்டக்கில் ஆர்ய வைத்தியசாலையில் மூலிகை சிகிச்சையும் செய்துகொள்ள இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

'ரோபோ' படம் வளர கதை விவாதங்களில் மிகவும் கைகொடுத்தவர் எழுத்தாளர் சுஜாதா. அத்தோடு பாதி படத்திற்கான வசனங்களையும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அவரின் திடீர் மறைவு ஷங்கரை மிகவும் பாதித்திருந்தாலும், மீதி படத்திற்கான வசனத்தை யார் எழுதுவது என்ற குழப்பத்தில் இருந்தவர் தற்போது அதை பாலகுமாரனிடம் ஒப்படைத்துள்ளார். இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கிய 'ஜென்டில்மேன்', 'காதலன்' படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

இன்னும் சில வாரங்களில் மொத்தக் குழுவினரும் அமெரிக்கா செல்லவிருக்கின்றனர். எப்படியும் 2010-ல் படத்தை ரிலீஸ் செய்துவிடுவார் ஷங்கர்.

வெப்துனியாவைப் படிக்கவும்