தசாவதாரத்துக்கு தடை கோரி வழக்கு!

புதன், 7 மே 2008 (19:42 IST)
அவதாரம் என்றாலே பிரச்சனைதான். இது தசாவதாரம். பிரச்சனைகள் பலமாகவே இருக்கும். புதிய பிரச்சனை, படத்துக்கு தடை!

பதினொன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சைவ, வைணவ மோதல்கள் தசாவதாரத்தில் இடம்பெறுகின்றன. சிவனை வழிபட மறுக்கும் ராமானுஜர் (கமல்) ஸ்ரீரங்கநாதர் சிலையுடன் பிணைத்து கடலில் வீசப்படும் காட்சியும் உண்டு.

படத்தின் டிரையிலரில் இந்துக்களின் ப்ரணவ மந்திரமான ஓம் எடுத்துக்களின் மீதும், பகவத் கீதையின் மீதும் கமல் கால் வைத்திருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெறுகின்றனவாம்.

இவை போதாதா? தசாவதாரம் சைவ, வைணவ மோதல்களை மிகைப்படுத்திக் காட்டுகிறது, இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது, ஆகவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் கோவிந்தா ராமானுஜ தாசர் என்பவர். இவர் சர்வதேச வைஷ்ணவ தர்மா சம்ரக்சணா என்ற சங்கத்தின் தலைவராம்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் விளக்கம் கேட்டு கே.எஸ். ரவிகுமார், ஆஸ்கர் ·பிலிம்ஸ், தணிக்கைக் குழு ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் இன்னொரு வில்லங்கமும் இருப்பதாக கூறுகிறார்கள்.

ஒரு படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கும் முன், அந்தப் படத்தை தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பார்க்க வேண்டும். படத்தை எங்கு பார்ப்பது, யார் யார் பார்ப்பது என்தான விவரங்கள் படம் பார்ப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வரை ரகசியமாக வைக்கப்பட வேண்டும். மாறாக, தசாவதாரம் படத்தை தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கமலின் வீட்டிலுள்ள பிரிவியூ தியேட்டரில் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையானால் தணிக்கைக் குழு நிலைமை திண்டாட்டம்தான் என்கிறார்கள் தணிக்கை விதி¨ தெரிந்தவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்