பரபரப்பை கிளப்பிய மன்சூர் பேச்சு!

வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (18:17 IST)
திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் காலையிலேயே கலந்து கொண்டார் மன்சூர் அலிகான். சாதாரணமாகவே பேச்சில் தீ வைப்பவர் மன்சூர். இன்று தீபாவளியே நடத்திவிட்டார்.

வட்டாள் நாகராஜ் போன்ற கன்னட வன்முறை கும்பலை சாடியவர் மெல்ல பேச்சை ரஜினி பக்கம் திருப்பினார். ரஜினி ஒரு மாமனிதர், அவர் பேசிய சம்பளத்துக்கு மேலேயே பணம் தந்தவர், போனில் அழைத்துப் பாராட்டியவர் என பீடிகையுடன் தொடங்கி, இந்தப் போராட்டத்தை ரஜினி மற்றும் அவரைப் போன்ற கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னின்று நடத்த வேண்டும் என்றார்.

பேச்சின் திசை சோனியா காந்தி, கலைஞர் என திசை மாறியதும் அவரது பேச்சை முடித்துக்கொள்ளச் சொன்னார் நடிகர் விஜயகுமார். அதன்பிறகும் நிறுத்தவில்லை மன்சூர். இப்படி பயந்து சாகிறதால்தான் இந்த மாதரி நடக்குது என்றார் கோபமாக.

நடிகர் சங்கம் மீது பல வழக்குகள் தொடர்ந்திருக்கிறார் மன்சூர். மைக்கை விட்டு விலகும்முன், எந்த நிபந்தனையும் இன்றி வழக்குகளை வாபஸ் பெறுவதாக அவர் அறிவித்தபோது பெரும் கைத்தட்டல்.

மன்சூரின் பெருந்தன்மைக்கா இல்லை பேச்சை முடித்துக் கொண்டதற்கா என்பது சஸ்பென்ஸ்!

வெப்துனியாவைப் படிக்கவும்