எரிமலை எப்படி தகிக்கும்? ஐப்பானெல்லாம் போக வேண்டாம். சேப்பாக்கத்திலேயே தெரிந்து கொள்ளலாம். அதன் அனலை உணர்ச்சியின் ஒட்டுமொத்த குவியலாக, காலை எட்டு மணிக்கே வந்து குவிந்துள்ளார்கள் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள்.
கன்னட அமைப்பினரின் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஒரு நாள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், தமிழ்த்திரையுலகைச் சேர்ந்தவர்கள்.
பாதி பங்ஷனில் வருகிறவர்கள் என்றொரு பெயர் நடிகர்களுக்கு உண்டு. இன்று அதனை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்திருக்கிறார்கள்.
காலையிலேயே நடிகர்கள் சத்யராஜ், சிபி, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், எஸ்.வி. சேகர், அஸ்லின் சேகர், பொதுச் செயலாளர் ராதாரவி, வடிவேலு, பிரசாந்த், வடிவேலு, கார்த்தி, நடிகைகள் மனோரமா, ஸ்ரீபிரியா, சினேகா, கார்த்திகா, தென்னிந்திய வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி., தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன், இயக்குநர்கள் விஜய டி. ராஜேந்தர், எஸ்.ஏ. சந்திரசேகரன், ஹரி என அறுபது சதவீத தமிழ்த்திரையுலகம் ஆஜர்.
வருவார்களா, வரமாட்டார்களா என்று ஐயத்துடன் இருந்த, பிறப்பால் கன்னடர்களான அர்ஜூனனும், முரளியும் போராட்ட களத்தில் முதல் ஆளாக கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம் தொடங்கிய சிறிது நேரத்தில் க்ளீன் ஷேவ் முகமும் கண்ணாடியுமாக கறுப்பு உடையில் வந்து சேர்ந்தார் அஜீத். அவருடன் லடாய் என்று கூறப்பட்ட வடிவேலு அவருக்கு கை கொடுத்து வரவேற்றது கண்கொள்ளா காட்சி.
எஸ்.வி. சேகர், பிரசாந்த், எஸ்.பி. முத்துராமன், பாண்டியராஜன், ஸ்ரீப்ரியா என மேடையில் பேசிய அனைவரும் கன்னட அமைப்புகளை கண்டித்ததோடு அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.
மேலே இருக்கும் காவிரியிலும் பிரச்சனை, கீழே முல்லைப் பெரியாறிலும் பிரச்சினை. இதற்கு ஆப்பு அடிக்கதான் இந்தப் போராட்டம் என்றார் நடிகர் சந்தானம்.
கவுண்டமணி பேச்சில் காரம், வருஷா வருஷம் தீபாவளி மாதிரி இந்தப் பிரச்சினை வருது என்றவர், அடிக்கு அடிதான் என்றார் ஆவேசமாக.
மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த முடிகிறது, இந்தியாவின் எல்லா இடங்களிலும் படப்பிடிப்பை நடத்த முடிகிறது. ஆனால், கர்நாடகாவில் மட்டும் நடத்த முடியவில்லை.
கன்னடர்கள் மட்டும் இந்தியாவின் தேசியத்தை, இறையாண்மையை மதிப்பதில்லை என்றார் இயக்குநர் சீமான்.
கோடம்பாக்கமே சேப்பாக்கத்தில் குவிந்தாலும், அனைவரிடமும் இருக்கும் ஒரே கெள்வி, ரஜினி வருவாரா?
கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் 11 - 20 மணி அளவில் கறுப்பு வட்டத் தொப்பியுடன் வந்திறங்கினார் ரஜினி. உண்ணாவிரத மேடையின் உணர்ச்சி அலைகளை மேலும் உசுப்பி விட்டது சூப்பர் ஸ்டாரின் வரவு.
ரஜினி என்ன பேசப்போகிறார்? கேட்பதற்கு இந்தியாவே காத்திருக்கிறது.