சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக முதல்வர் ககருணாநிதியால் முன்னிறுத்தப்பட்டவர் மு.க. முத்து. அறுபது வயதாகும் மு.க. முத்து மீண்டும் தாய்வீடு திரும்பியிருக்கிறார். அதாவது தமிழ் சினிமாவுக்கு!
'இந்திர விழா' படத்தில் ஸ்ரீகாந்துக்கு அப்பாவாக நடிக்கிறார் மு.க. முத்து. இந்திர விழா வருவதற்கு முன் முந்திக்கொண்டுவிட்டார் இயக்குனர் பவித்ரன்.
அவரது மாட்டுத்தாவணி படத்தில் மு.க. முத்துவை பாடவைத்துள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் ஒலிக்கூடத்தில் நேற்று மாலை மு.க. முத்து பாடிய அண்ணன் மாரே... தம்பிமாரே... என்ற பாடல் ஒலிப்பதிவானது. உடல் தளர்ந்தாலும் குரல் இன்னும் அப்படியே கணீரென்றிருக்கிறது என்றார் தேவா.
முதல்வர் மகனல்லவா... அவரது பாடலை கேட்கவும், வாழ்த்தவும் பெரும் கூட்டம். எல்லோரும் வி.ஐ.பி.கள். தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன், தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன், சிவசக்தி பாண்டியன் ஆகியோர் அவர்களில் சிலர்.
தொடர்ந்து பாடவும், நடிக்கவும் செய்வேன் என அவர் சொன்னது முதல்வருக்கு, இன்பத் தேன்வந்து பாய்ந்த பரவசத்தை கொடுத்திருக்கும்.