கோபத்தைக் கிளறிய நான் கடவுள் வசனகர்த்தா!
திங்கள், 3 மார்ச் 2008 (20:02 IST)
எழுத்தாளர் ஜெயமோகன் இலக்கிய உலகில் பிரபலம். இவரளவிற்குச் சர்ச்சையில் சிக்கிய தமிழ் எழுத்தாளர்கள் வேறில்லை. காரணம், ஜெயமோகனின் கறார் விமர்சனம்.
முதல்வர் கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் எனத் தமிழ்கூறு நல்லுலகம் கொண்டாடும் போது அவர் ஒரு இலக்கியவாதியே இல்லை என்றோரு வெடியை வீசியவர் ஜெயமோகன். அது, முரசொலியில் ஆப்பசைத்த குரங்கு என முதல்வர் எழுதும் அளவிற்கு பயங்கரமாக வெடித்தது.
கஸ்தூரிமானில் வசனம் எழுதிய ஜெயமோகன் தற்போது பாலாவின் 'நான் கடவுள்', வசந்த பாலனின் 'அங்காடித் தெரு' படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார். சினிமாவில் நுழைந்த பிறகு, சினிமாக்காரர்களும் ஜெயமோகனின் விமர்சனத்தில் அடிபடத் துவங்கியுள்ளனர்.
தனது ப்ளாக்கில் எம்.ஜி.ஆர்., சிவாஜி பற்றி ஜெயமோகன் எழுதிய விமர்சனத்தைப் பிரபல வார இதழ் ஒன்று வெளியிட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரது ரசிகர்களையும் கோபப்பட வைக்கும் அத்தனை குணநலன்களுடன் எழுதப்பட்ட அங்கதக் கட்டுரைகள் அவை.
ஜெயமோகனைப் பரவலாக யாருக்கும் தெரியாது என்பதால் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் கட்டுரை வெளியிட்ட வார இதழின் அலுவலகத்தைத் தாக்கினர். இந்தக் கட்டுரை தமிழ் சினிமாவிலும் புயலைக் கிளப்பியது.
நடிகர்கள் ராதாரவி, விஜயகுமார், மயில்சாமி போன்றவர்கள் உண்ணாவிரதம் இருந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். உலகில் முதல் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் முதலமைச்சர் இ.எம்.எஸ். நம்பூதிரி பாட்டை விமர்சித்துக் கட்டுரை எழுதியவர் ஜெயமோகன். இந்த சலசலப்புக்கெல்லாம் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.