''நான் இந்திய, தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன். எனது உடையால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்ரேயா கூறியுள்ளார்.
webdunia photo
WD
`சிவாஜி' படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு, நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஸ்ரேயா உள்பட நடிகர்-நடிகைகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரேயா குட்டை பாவாடை உடை அணிந்து கவர்ச்சியாக வந்திருந்தார். அந்த கவர்ச்சி உடையோடு விழா மேடையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார்.
அவர் அணிந்து வந்திருந்த கவர்ச்சி உடைக்கும், அதோடு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்ததற்கும் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரசிகர்கள் கூச்சல் போட்டனர்.
ஆபாச உடை அணிந்து வந்த ஸ்ரேயா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, சென்னை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் ராமமூர்த்தி, சென்னை அண்ணாசதுக்கம் போலீசில் புகார் மனு கொடுத்தார். புகார் மனுவை பதிவு செய்து போலீசார் ரசீது வழங்கினார்கள். ஆனால், வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
புகார் மனு தொடர்பாக நடிகை ஸ்ரேயா மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அண்ணாசதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆலோசனை நடத்தி வந்தார். இது தொடர்பாக, துணை ஆணையர் ராமசுப்பிரமணி, உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடமும் தேவையான அறிவுரைகளை பெற்றார். உயர் அதிகாரிகள் வழங்கிய அறிவுரையின்படி ஆபாச உடை பிரச்சினையில் நடிகை ஸ்ரேயா மீது எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று அண்ணாசதுக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புகார் கொடுத்துள்ள ராமமூர்த்தி, நடிகை ஸ்ரேயா ஆபாச உடை அணிந்து வந்ததை நேரில் பார்க்கவில்லை. பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்துவிட்டு புகார் மனு கொடுத்துள்ளார். மேலும், மேலோட்டமாக பார்க்கும்போது நிர்வாணமாக வராத பட்சத்தில் எந்த விதமான உடை அணிவது என்பது அவரவர் சொந்த விருப்பமாகும். இதில் போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியாது என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கும், இந்து மக்கள் கட்சிக்கும், காவல்துறைக்கும் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் தஞ்வாவூர் இந்திப் படத்தின் சூட்டிங்கில் இருந்ததாகவும். அங்கிருந்து நேராக விழா மேடைக்கு வந்ததாகவும், உடை மாற்றக்கூட அவகாசம் இல்லை. நான் இந்திய, தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன். எனது உடையால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் ஸ்ரேயா கூறியுள்ளார்.