சர்வதேச பட விழா சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. டிசம்பர் 14ஆம் தேதி நடக்கும் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன், திரையுலக பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
பல்வேறு நாடுகளில் தயாரான திரைப்படங்களை திரையிடுவதற்காகவும், அந்த படங்களை பற்றி திறனாய்வு செய்வதற்காகவும் சர்வதேச பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் இதுவரை 4 முறை சர்வதேச பட விழாக்கள் நடைபெற்றுள்ளன. 5-வது சர்வதேச பட விழா சென்னையில் டிசம்பர் 14ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற இருக்கிறது.
பல்வேறு நாடுகளில் தயாரான சிறந்த படங்கள், இந்த பட விழாவில் திரையிடப்படுகின்றன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள `பைலட்' திரையரங்கம், `உட்லண்ட்ஸ்' திரையரங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை திரையரங்கம் ஆகியவற்றில் சர்வதேச படங்கள் திரையிடப்பட உள்ளன. மொத்தம் 42 நாடுகளை சேர்ந்த 107 படங்கள் இந்த பட விழாவில் கலந்துகொள்கின்றன.
பருத்தி வீரன், மொழி, வெயில், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன் ஆகிய தமிழ் படங்களும் அதில் கலந்து கொள்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, சென்னையில் உள்ள சர்வதேச திரைப்பட விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
டிசம்பர் 14ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கில் நடைபெறுகிறது. அதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம், திரையுலக பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்பட நடிகர்-நடிகைகளும், இயக்குனர்களும் விழாவில் பங்கேற்கிறார்கள். நிறைவு விழா டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும். அதில், சிறந்த படங்கள், திரைப்பட கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.