"அரசியல் என்பது தன்னைத்தானே தியாகப்படுத்திக் கொள்ளும் மிகப்பெரிய வேலையாகும்'' என்று நடிகர் ஷாருக்கான் கூறினார்.
அரசியல் தலைவர்கள், முக்கிய பிரதிநிதிகள், நடிகர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நேற்று 2-வது நாளாக நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்தி நடிகர் ஷாருக்கானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், அரசியலில் ஏன் ஈடுபடக் கூடாது என்று என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அரசியலில் நான் ஈடுபடாததற்கு காரணம் எனக்குத் தெரியாத ஒரு துறையில் நான் ஏன் ஈடுபடவேண்டும் என்பதுதான் என்றார்.
அரசியலில் கோவிந்தா, ராஜ் பப்பர், சத்ருகன் சின்கா போன்றவர்கள் சேர்ந்தார்கள் என்றால் அவர்களிடம் அரசியல் ஈடுபாடு இருந்தது. என்னிடம் அதுபோன்ற எண்ணமே கிடையாது. மாறாக, நடிப்பதில் மட்டுமே எனக்கு ஆர்வம் இருக்கிறது. எல்லாவித வேடங்களையும் ஏற்று சினிமாவில் நடிப்பதன் மூலம் நாட்டிற்கு சேவையாற்றவே நான் விரும்புகிறேன் என்று ஷாருக்கான் கூறினார்.
அரசியல் என்பது தன்னைத்தானே தியாகப்படுத்திக் கொள்ளும் மிகப்பெரிய வேலையாகும். ஆனால் சினிமாவில் அரசியல்வாதிகளை மிகவும் கேலியாக விமர்சனம் செய்கிறார்கள். அதற்காக திரையுலகம் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பெருந்தன்மையுடன் கூறினார் ஷாருக்கான்.
இளம் தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவது பாராட்டத்தக்கது. ராகுல் காந்தியை சந்தித்தபோது உங்களைப் போன்றவர்கள் அரசியல் ஈடுபடுவது நல்ல அம்சம் என்றேன் என ஷாருக்கான் கூறினார்.