சத்யமேவ ஜெயதே நாடகத்தின் இரண்டாவது ஷோ பரபரப்பான அறிமுகக் காட்சியுடன் ஆரம்பமாகியுள்ளது. போலீஸ், புகார் என்று இரண்டாவது பாகத்தில் கொஞ்சம் க்ரைமையும் சேர்த்துள்ளார் நடிகர் அமீர்கான்.
FILE
நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசுவதும், கேமராவின் முன் உணர்ச்சிவசப்படுவதும்தான் இந்த ஷோ-வின் பிரதான நிகழ்வு. அமீர்கான் அதையாவது செய்கிறார், நீ என்ன பிடுங்கினால் என்று சத்திய ஆவேசம் கொள்ளும் அன்பர்கள் சத்யமேவ ஜெயதே நாடகத்தின் முதல் பாகம் இந்தியாவில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தது என்பதை கூறினால் நலமாக இருக்கும்.
நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் அதிகமானதும், அமீர்கானின் இமேஜ் உயர்ந்ததும்தான் சத்யமேவ ஜெயதே முதல் ஷோ-வின் சாதனை என்று சொன்னால் அதனை மறுக்க முடியுமா?
யார் எந்தப் பிரச்சனையை பேசினாலும் அந்தப் பிரச்சனையை தீர்க்க வந்த பிதாமகனாக அவரை கருதுவது தவறான அணுகுமுறை. அவர் பேசுகிற பிரச்சனைக்கு அவர் எவ்வளவுதூரம் காரணமாக இருக்கிறார், அந்தப் பிரச்சனையை தீர்க்க அவர் எடுத்த முயற்சிகள் என்ன என்று பார்ப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
அம்பானிகளும், மற்ற கார்ப்பரேட்டுகளும்தான் இந்தியாவை ஆளுகிறார்கள், அவர்களின் ஆணைப்படியும் விருப்பப்படியுமே ஆளும் காங்கிரஸும், எதிரணியில் இருக்கும் பாஜக-வும் நடந்து கொள்கின்றன என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் அம்பலப்படுத்தினார். முகேஷ் அம்பானியின் மீது வழக்கு என்றவுடன் ஜென்ம விரோதிகளான காங்கிரஸும், பாஜக வும் கைகோர்த்துக் கொண்டன. இந்த கார்ப்பரேட்களின் செல்லப்பிள்ளைதான் அமீர்கான்.
FILE
அமீர்கான் கேமராவுக்கு முன் கறுப்புப் பணம் குறித்து பேசுகிறார். ஸ்டுடியோவுக்கு வெளியே, அதிக கறுப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் அம்பானிகளின் பார்ட்டிகளில் முதல் ஆளாக கலந்து கொள்கிறார். தண்ணீர் பிரச்சனை குறித்து பேசுகிறார். இந்தியாவின் நிலத்தடி நீரை சுரண்டும் கோலா மற்றும் மினரல் வாட்டர் நிறுவனங்களின் விளம்பர தூதுவராக செயல்படுகிறார். மருத்துவம் வணிகமானது குறித்து கவலைப்படுகிறார். அப்படி வணகமயமாக்கியவர்களின் நட்பு வட்டாரத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.
அமீர்கானுக்கு இது எப்படி சௌகரியமாக இருக்கிறதோ அதேபோல் அவரை ஆதரிப்பவர்களுக்கும் ஒரு பகட்டு. சே... நேத்து புரோகிராம்ல அமீர்கான் எப்படி ரியாக்ட் பண்ணினார். வாட் ஏ மேன் என்று பணியிடத்திலும், பார்ட்டியிலும் பகிர்ந்து கொள்வதில் ஓர் ஆனந்தம், கௌரவம்.
நாட்டில் நிலவும் பிரச்சனைகளின் சூத்ரதாரிகளை குறித்து பேசாமல், அதன் அடிப்படைகளை ஆராயாமல் நடத்தப்படும் அமீர்கானின் சத்யமேவ ஜெயதே நாடகத்தால் ஒரு பயனும் இல்லை. பிரச்சனைகளை திசை திருப்பவும், அதனை போஷிக்கவுமே இதுபோன்ற நிகழ்ச்சிகள் துணை புரியும்.
அமீர்கான் ஒரு அமைப்பிடம் பணம் பெற்று மசூதி கட்டுவதற்காக தந்தார் என மீடியாவில் செய்தி வெளியானது. இது திட்டமிட்ட அவதூறு, அந்த செய்தியை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமீர்கான் போலீஸில் புகார் தந்துள்ளார். இன்னொருபுறம் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான பென்ஸ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதேபோன்ற காரைத்தான் நமது பாரத பிரதமரும் பயன்படுத்துகிறார். புல்லட் புரூப், பாம் புரூப் உள்பட சகல வசதிகளும் கொண்டது.
FILE
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் காரணமாக அமீர்கானின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், அதற்காகவே இந்த காஸ்ட்லி காரை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. பணம் இருப்பவர்கள் அவர்களின் வலிமைக்கேற்ப சொகுசு கார்கள் வாங்குவது வழமை. அது அவர்களின் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் அதற்கு தியாகி முலாம் பூசும்போதுதான் விமர்சிக்க வேண்டியதாகிறது.
எந்தவொரு போராட்டமும் அதன் நோக்கம், அதன் பெருமதிப்பு ஆகியவற்றை வைத்தே மதிப்பிடப்படும். சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் நோக்கமும், பெருமதிப்பும் அது பேசும் பிரச்சனைகளுக்கு சிறிதளவுகூட நியாயம் செய்யவில்லை என்பதுடன் தனிமனித துதிபாடலுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது. அந்நிகழ்ச்சியின் பெறுமதிப்பு என்பது அமீர்கான் என்ற நடிகரின் இமேஜை பிரமாண்டப்படுத்தியது/படுத்துவது, நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்தியது/படுத்துவது என்பது மட்டுமே. சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை விமர்சிப்பதற்கான முக்கிய காரணம் இதுவே.
சத்யமேவ ஜெயதே இந்தியாவின் பிரச்சனைகளைப் போக்கும் சர்வரோக நிவாரணி என்ற மாயத்தை வலிந்து உண்டாக்கும் மலிவு விளம்பரத்தின் ஒரு பகுதிதான் அமீர்கானின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தியும். இல்லை என்பவர்கள் இந்த நிகழ்ச்சி இந்தியாவின் பிரச்சனைகளை போக்கும் - குறைந்தபட்சம் சின்ன மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என உத்தரவாதம் தர முடியுமா? அதுவும் வேண்டாம். தனியார் தொலைக்காட்சியை விடுத்து தூர்தர்ஷனில் இந்த நிகழ்ச்சியை நடத்த அமீர்கான் முன் வருவாரா?
மாட்டார். ஏன் மாட்டார் என்ற கேள்வியில் அடங்கியிருக்கிறது அமீர்கானின் சத்யாவேசத்தின் உண்மை முகம்.