சினி பாப்கார்ன் - கமல், ரஜினிக்கு வரி விலக்கு இல்லை
திங்கள், 20 ஜனவரி 2014 (10:24 IST)
சல்மான் - பேட் பாய் டூ குட் பாய்
பாலிவுட்டின் பேட் பாய் என்றால் அது சல்மான்கான். சட்டை போட மாட்டார், சண்டை மட்டுமே போடுவார், காதலிகளின் வீட்டை நள்ளிரவில் தட்டி கலாட்டா செய்வார்.... ஏகப்பட்ட புகார்கள் அவர் மீது. அதையெல்லாம் வழித்து துடைத்து குட் பாயாக மாறியிருக்கிறார் சல்லு பாய். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவுக்கு இவர்தான் தொகுப்பாளர்.
FILE
சிறந்த எண்டர்டெயினர் விருதுக்கு ஷாருக்கானின் பெயரை அறிவித்ததோடு சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றி பெற்றதற்கு தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார். ஷாருக்கான் சல்லு பாயின் பரம எதிரி என்பதை இருவருமாக அந்த விழாவில் உடைத்தனர். அதே விழாவில் இந்தியாவின் சிறந்த எண்டர்டெய்னர் சல்மான்கான் என்று ஷாருக்கான் சல்லு பாயை புகழ், இருவரும் கட்டித் தழுவ, தனது ஜெய் ஹோ படத்தை பிரமோட் செய்யும் விதமாக ஜெய் ஹோ என்று சல்மான் ஷாருக்கிடம் கூறும்படி கேட்க, அவரும் ஜெய் ஹோ என்று கூற... சென்டிமெண்ட் சினிமா தோற்றது.
FILE
அந்த விழாவில் பழைய நீலப்பட நடிகை சன்னி லியோனுக்கு சல்மான் சேலை கட்ட கற்றுத் தந்தது இன்னொரு கலாட்டா. சல்லு பாய் நல்லவர் ஆவது என்று முடிவு செய்துவிட்டார். ஜனவரி 24 வெளியாகவிருக்கும் அவரது ஜெய் ஹோ படம் பே இட் ஃபார்வர்ட் படத்தின் தழுவல். நாம் ஒருத்தருக்கு நன்மை செய்தால் அந்த பலனை அனுபவித்தவர் மூன்று பேருக்கு நன்மை செய்ய வேண்டும். அப்படி மூன்று முப்பதாகி மொத்த சமூகமே நன்மை செய்யக் கூடியதாக மாறும். படத்தின் இந்த தீம் தான் சல்மான்கானை மாற்றியிருக்குமோ?
தமிழகத்தின் மார்ட்டின் ஸ்கார்சஸி
கௌதம் வாசுதேவ மேனன் ஒருமுறை, ஹாலிவுட் மார்ட்டின் ஸ்கார்சஸியின் படங்களைப் பார்த்து நான் இம்ப்ரஸ் ஆவதில்லை, மணிரத்னம்தான் என்னை பாதித்தவர் என்று சொன்னதாக ஞாபகம். ஹாலிவுட் என்னை பாதிக்கவில்லை, சுதேசிதான் என்னுடைய சாய்ஸ் என்பதை இப்படி தெரிவித்திருந்தார். இப்போது இன்னொருமுறை மார்ட்டின் ஸ்கார்சஸியை தனது பேச்சில் இழுத்திருக்கிறார்.
FILE
சுப்பிரமணியபுரம் படத்தை வியந்து பாராட்டியவர்களில் கௌதமும் ஒருவர். அதன் ஆங்கில திரைக்கதை புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர், சுப்பிரமணியபுரம் படம் மார்ட்டின் ஸ்கார்சஸியின் படத்தை பார்க்கிற அனுபவத்தை தருவதாக தெரிவித்தார். டாக்சி டிரைவர், ராகிங்ஃபுல் போன்ற ஸ்கார்சஸியின் படங்களுடன் ஒப்பிடக் கூடியதுதான் சுப்பிரமணியபுரமும். ஹிந்தியில் சுப்பிரமணியபுரத்தை ரீமேக் செய்கிறார் சசிகுமார். ஒரிஜினலின் அழுத்தம் ரீமேக்கில் கிடைக்குமா?
மலையாளிகளின் ஜில்லா
மலையாளிகளின் ஈகோ உலக பிரசித்தம். பிரபலமான எதுவும் மலையாளிகளுக்கே சொந்தம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள். ரஹ்மான் தொடங்கி ரகுவரன்வரை அனைவரையும் மலையாளி வாஞ்சையோடுதான் அணுகுவார்கள். மோகன்லால் வாமனபுரம் பஸ்ரூட் படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக நடித்த போது நண்பர் ஒருவர் அது குறித்து செய்தி சேகரித்து தமிழ் பத்திரிகையில் வெளியிட்டார். ஒரு தமிழ் நடிகருக்கு கேரளாவில் இருக்கும் பிரபலத்தை பார் என்று காட்டுவதுதான் நண்பரின் நோக்கம். ஆனால் எம்.ஜி.ஆரை ஒரு மலையாளி என்று மலையாளிகள் நினைப்பதால்தான் அவரது ரசிகராக மோகன்லால் நடித்தார் என்ற உண்மை நண்பருக்கு தெரியவில்லை.
FILE
ரகுவரனும், நம்பியாரும் இறந்த போது நமது ஊடகங்கள் தமிழ் நடிகர் மரணம் என்று இரங்கல் தெரிவித்த போது மலையாள சேனல்கள் கேரளாவில் உள்ள அவர்களின் பூர்வ வீட்டை படம் பிடித்து இருவரையும் மலையாள நடிகர்கள் என்று உறுதி செய்து கொண்டிருந்தன.
அவ்வளவு ஏன் இனியாவையே தென்னிந்திய திரையுலகை கீழ்ப்படுத்திய தாரகை என்றுதான் குறிப்பிடுவார்கள். ஜில்லா விஷயத்திலும் அதுதான் நடந்தது. ஜில்லா வெளியான இரண்டு நாள்களுக்கு செய்தி நேரத்தில் ஜில்லா குறித்து ஒளிபரப்பினார்கள். நேரடி மலையாளப் படங்களைகூட செய்தி நேரத்தில் குறிப்பிடுவதில்லை. பிறகு ஏன் ஜில்லா?
FILE
படம் சுமார் என்றாலும் முதல் மூன்று நாள்கள் கேரளாவை அதிர வைத்தது ஜில்லாவுக்கு வந்த கூட்டம். படத்தில் மோகன்லால் நடித்திருந்தாலும் அதன் மலையாள டாமினேஷனை சொல்ல ஏதாவது வேண்டுமே. மலையாள சேனல்கள் அதற்காக கண்டு பிடித்தவர் எடிட்டர் டான்மேக்ஸ். ஜில்லா படத்தின் எடிட்டரான இவர் மலையாளி. செய்தி நேரத்தில் அவரை நேர்காணல் செய்து, நமது கோட்டயங்காரரான டான்மேக்ஸ்தான் இப்போது தென்னிந்தியாவை கலக்கும் எடிட்டர். இவரிடம் தொழில் கற்றவர்கள்தான் இப்போது பிரபல எடிட்டர்களாக இருக்கிறார்கள் என்று தமிழ் ஜில்லாவை மலையாள ஜில்லாவாக்கும் பெயிண்டிங் வேலையை பொறுப்பாக செய்து முடித்தனர். இந்த பெயிண்டிங் வேலையில் மட்டும் சூர்யா, ஏஷியாநெட், மலையாள மனோரமா என்று எந்த சேனல்களுக்கிடையிலும் வேற்றுமையில்லை.
கமல், ரஜினிக்கு வரிச்சலுகை கிடையாது
கமல், ரஜினிக்கு மட்டுமில்லை விஜய், அஜீத் என்று முன்னணி நடிகர்கள் யாருடைய படங்களுக்கும் வரிச்சலுகை அளிப்பதில்லை என அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் பிரமாண்டமாக பல கோடிகள் செலவளித்து தயாராகின்றன.
FILE
வசூலும் பல கோடிகள். இந்த செழிப்பான வியாபாரத்துக்கு வரிச்சலுகை என்ற பெயரில் அரசு பணத்தை இழக்க வேண்டுமா என்ற நியாயமான கேள்விதான் இந்த வரிச்சலுகை ரத்துக்கு காரணம் என்கிறார்கள். ஜில்லா, வீரம் படங்களுக்கே வரிச்சலுகை தரப்படவில்லை என்கிறார்கள் (உண்மையா?)
FILE
உண்மையாக இருந்தால் இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய முடிவு. அதேபோல் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதையும் இதே ஊக்கத்தோடு அரசு கண்காணித்து தடுத்தால் சூதாட்டமாக மாறிப் போன சினிமா வியாபாரத்தை அழிவிலிருந்து காப்பாற்றலாம்.