பாலுமகேந்திரா என்னும் பள்ளிக்கூடம்

சனி, 21 மே 2011 (17:26 IST)
வெற்றிமாறனின் ஆடுகளம் ஆறு தேசிய விருதுகளை‌ப் பெற்றிருக்கிறது. சேவல் சண்டை என்ற தமிழர்களின் பாரம்ப‌ரிய விளையாட்டை பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில், சேவல் சண்டையை குலப் பெருமைக்காக ஒரு சிலுவைப் போல் சுமக்கும் போலீஸ் அதிகா‌ரியையும், சேவல் சண்டையில் தனது ஆதிக்கம் காலாவதியாவதை ஒப்புக்கொள்ள இயலாமல் குரூரத்தின் மடியில் தலைசாய்க்கும் மனிதனையும் வெற்றிமாறன் காட்சிப்படுத்தியிருந்தார்.

ஆடுகளத்தின் மையம் சேவல் சண்டை. அதில்தான் இந்த இரு மனிதர்களும் வருகிறார்கள். தோல்வியை சாக்காக வைத்து தனது சிலுவையை இறக்கி வைக்கிறார் போலீஸ் அதிகா‌ி. ஆனால் இன்னொரு மனிதனின் நிலை வேறு. சேவல் சண்டைதான் அவனது எல்லாமும். அதைவிட்டு விலகினால் அவன் ஒன்றுமேயில்லை. சேவல் சண்டையில் அவனது ஆதிக்கம் கைநழுவிப் போவதையே அவனால் சகித்துக் கொள்ள முடியாது. தன்னை உயிராக மதிக்கும் சிஷ்யன், காதல் மனைவி என எல்லோரும் அதற்கு முன்னால் ஒரு பொருட்டல்ல.

இந்த இருவேறு நபர்களை, இருவேறு உலகங்களை முன்னிறுத்தியதால் படத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் இருவேறு துண்டுகளாக பெரும்பாலான பார்வையாளர்களுக்கு தோன்றியதில் வியப்பில்லை. மேலும் திணிக்கப்பட்ட காதல் காட்சியும், முற்றுப் பெறாத காவிய முடிவும் ரசிகர்களை மட்டுமின்றி விமர்சகர்களையும் நெ‌ளிய வைத்தது.

எப்படியிருப்பினும் ஆடுகளம் ஒரு சீ‌ரிய முயற்சி. விமர்சனங்களை கடந்து வரவேற்போம்.

இனி நமது தலைப்புக்கு வருவோம்.... பாலுமகேந்திரா.

பாலுமகேந்திராவை முன்னிறுத்தி சில விஷயங்களை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. பாலுமகேந்திராவைவிட அதிக வெற்றிகள் கொடுத்த இயக்குனர்கள் நம்மிடையே உள்ளனர். அவரது சமகாலத்திய வெற்றி வீரர்கள் பலரும் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். ஆனால் இன்று நடைபெறும் சினிமா விழாக்களில் அவர்களைவிடுத்து பாலுமகேந்திரா, பாரதிராஜபோன்றவர்களுக்கே மேடையில் நாற்காலிகள் கிடைக்கின்றன. முக்கியமாக எல்லா விழா மேடையிலும் பாலுமகேந்திராவுக்கென தனி நாற்காலி உள்ளது. அவர் விழாவில் பங்கேற்றாலும் இல்லாவிடினும்.

இது எப்படி? எஸ்.பி.முத்துராமன் போன்ற கமர்ஷியல் வெற்றியாளர்களை தவிர்த்து பாலுமகேந்திராவை இளைய தலைமுறை கொண்டாட என்ன காரணம்?

நமது காலத்திலேயே கமர்ஷியல் வெற்றி சாயமிழந்து கலை துலக்கம் பெறுவதையே இது காட்டுகிறது. காலத்தால் அழியாதது கலாபூர்வமான வெற்றி. அந்த வெற்றியே பாலுமகேந்திராவை இன்னும் துடிப்புடன் இளைஞர்களின் மனதில் இருத்தி வைத்திருக்கிறது.

சினிமாவில் தொடர்ச்சியாக பங்களிப்பு செலுத்திவரும் திய‌ரிட்டிக்கலாக சினிமாவை தெ‌ரிந்து வைத்திருக்கும் ஒரே தமிழ் இயக்குனர் பாலுமகேந்திரா. திய‌ரிட்டிக்கலாக என்ற பதம் தொழில்நுட்ப லாகத்துடன் செயல்படும் ஒரு சஃப்ட்வேர் தோற்றத்தை பலருக்கு ஏற்படுத்திவிடும். சேறும் சகதியுமான அனுபவ உலகம் மட்டுமே நல்ல சினிமா என்றொரு கருத்துருவும் இங்கு இருக்கிறது. தவறு... இது முற்றிலும் தவறு. அறிவுப்பூர்வமான பு‌ரிதலும் அனுபவ செழுமையும் சினிமாவுக்கு இன்றியமையாதது. சினிமா ஒரு தொழில்நுட்ப சாதனமும்கூட என்பதை இங்கு நினைவுகூர்வது சாலப் பொருத்தம்.

இன்று தமிழ்‌த் திரையுலகை ஆள்கிறவர்களாக பாலுமகேந்திராவின் சிஷ்யர்கள் இருக்கிறார்கள். 58வது தேசிய விருதில் ப‌ரிசுகள் குவித்த ஆடுகளமும் ச‌ரி, தென்மேற்குப் பருவக்காற்றும் ச‌ரி பாலுமகேந்திராவின் சீடர்களால் உருவாக்கப்பட்டது.

வெற்றிமாறனும், சீனு ராமசாமியும் அவ‌ரிடம் சினிமா கற்றவர்கள். பிதாமகனுக்காக தேசிய விருது வாங்கிய பாலாவும் பாலுமகேந்திராவின் சீடர்தான். அவ‌ரின் சீடர்கள்தான் இன்று கவனிக்கப்படும் இயக்குனர்களாக வலம் வருகிறார்கள்.

பாலுமகேந்திராவிடம் நீங்கள் உதவியாளராக இருக்க வேண்டுமென்றால் தினம் ஒரு புத்தகத்தை படித்து, அதன் கதைச்சுருக்கத்தை எழுதி அதனை அவ‌ரிடம் காண்பிக்க வேண்டும். நீங்கள் 365 நாட்கள் அவ‌ரிடம் உதவியாளராக இருக்கிறீர்கள் என்றால் 365 கதைகளை படித்து அதன் கதைச்சுருக்கத்தை எழுதி‌த் தந்தாக வேண்டும். இப்படியொரு நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்கும் ஒரே தமிழ் இயக்குனர் பாலுமகேந்திரா மட்டுமே.

பாலுமகேந்திராவை சந்தித்தால் அவர் உங்களை முதலில் இட்டுச் செல்வது தனது புத்தகக் களஞ்சியம் இருக்கும் பகுதிக்காகவே இருக்கும். தமிழின் ஆரோக்கியமான எழுத்துக்கள் குவிந்திருக்கும் பகுதி அது. இரண்டாவது, உலகின் தலைசிறந்த திரைப்படங்களின் சேமிப்பு அறை. திரைப்படங்களிலும் உங்களை‌க் கவர்ந்த அம்சங்களை நீங்கள் எழுதி அதை அவரது பார்வைக்கு வைத்தாக வேண்டும். இந்த பட்டறிவுதான் அவரது சீடர்களை திறமையானவர்களாக உருவாக்கியிருக்கிறது.

பாலா, சீனு ராமசாமி, வெற்றிமாறன் என அவ‌ரிடமிருந்து வந்தவர்கள் சிறப்பான திரைப்படத்துக்கான அடித்தளத்தை அமைத்து வருகிறார்கள். கற்றது தமிழ் ராமையும் இதில் சேர்க்க வேண்டும். ஆகச் சிறந்த கலைஞன். அவ‌ரின் தங்க மீன்கள் வெளிவரும் போது பாலுமகேந்திரா எனும் குருவின் பெருமை மேலும் பிரகாசமடையும்.

பாலுமகேந்திராவுக்கு தனியாக ஒரு வேண்டுகோள். கலைஞர்களுக்கேயு‌ரிய சோம்பலையும், நிதானத்தையும் நீங்கள் கைவிட வேண்டும். கலையைப் பொறுத்தவரை குரு, சிஷ்யன் என்ற பதங்கள் வெறும் மாயை. கலைக்கு வெளியே இருக்கும் எங்களைப் போன்றவர்கள் ஒரு வசதிக்காக வைத்துக் கொள்ளும் ஏற்பாடு. கலையில் குரு, சிஷ்யன் இல்லை. கான்டம்ப‌ரரி மட்டுமே உண்டு. இன்னும் சில வருடங்களில் காலம், உங்களையும் உங்கள் சிஷ்யர்களையும் சமகாலத்தவராகவே பார்க்கும். நேற்றைய கமர்ஷியல் வெற்றியாளர்களை காலம் உதறியதைப் போல் குரு, சிஷ்யன் என்ற பதங்களும் மறைந்து போகும். அப்போது பாலாவும், வெற்றிமாறனும் உங்களிடம் பயின்றவர்கள் என்பதைவிட உங்கள் சமகாலத்தவர் என்பதே முதன்மைபெறும். சிறந்த படத்தை தந்தவர் பாலாவா, வெற்றிமாறனா இல்லை பாலுமகேந்திராவா என காட்சிகள் மாறும்.

நாம் சொல்ல வருவது இதுதான். பாலாவோ, வெற்றிமாறனோ அமைத்துத் தரும் மேடைகளில் அவர்களை குரு ஸ்தானத்திலோ, தகப்பன் ஸ்தானத்திலோ இருந்து ஆசிர்வதிக்காதீர்கள். பிதாமகன் சிறந்த படம் என்றால் அதைவிட சிறந்தப் படத்தை என்னால் தர முடியும் என்று அறைகூவுங்கள். சீடர்களுக்கு இன்னும் கைவராத தளங்களை உங்கள் திரைப்படங்களில் காட்சிப்படுத்துங்கள். ஆசிர்வதிப்பது கலைஞனின் அந்திமம். சவால்தான் ஆரம்பம். இன்று உங்களுடைய சவால் உங்களின் சீடர்கள். வீடு, சந்தியாராகத்தில் எப்போதோ நீங்கள் அவர்களை கடந்துவிட்டாலும் காலம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது.

எதிர்பார்ப்பை எதிர்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்