தசாவதாரம் இந்துத்துவா பிரதியா?- காக்டெயில் சர்ச்சை!
சனி, 19 ஜூலை 2008 (20:55 IST)
சென்னை உதயம் திரையரங்கில் தசாவதாரம் படம் பார்த்து விட்டு இரண்டுமுறை வாந்தி எடுத்ததாகவும், அன்று இரவு முழுவதும் பேதியானதாகவும் முனியாண்டி கூறியதைத் தொடர்ந்து இஸ்மாயில் இப்படிக் கேட்டான்.
''சிவாஜி பார்த்திருந்தா ரத்த வாந்தி எடுத்து செத்திருப்பியே!''
முனியாண்டி சொன்னான், ''இதாம்பா உன்னோடு பேஜாரு. கமல் படம் நல்லா இல்லீன்னா உடனே ரஜினிய இஸ்தாரதா?''
அத்யந்த நண்பர்களான முனியாண்டியும், இஸ்மாயிலும் தங்களது சர்ச்சையை தொடங்கியபோது, வடபழனி சூர்யா மருத்துவமனையை ஒட்டிய அரசு மதுவிடுதியில் முதல் ரவுண்டை முடித்திருந்தனர். மூன்றாவது ரவுண்டின் முடிவில் திக்கலும் திணறலுமாக முனியாண்டி சொன்னவற்றின் உத்தேச தொகுப்பு பின்வருமாறு:
தசாவதாரம் சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் எதிரான ஓர் இந்துத்துவா பிரதி. இந்துத்துவாவின் கூறுகள் படம் நெடுக காணக் கிடக்கிறது. இதனை அவன் சொல்லவில்லை. விமர்சகரும், நிழல் இதழின் ஆசிரியருமான திருநாவுக்கரசே சொல்கிறார்.
படத்தில் வரும் தலித் தலைவரின் பெயர் வின்சென்ட் பூவராகவன். தலித்துகள் பூவராகன் என்று பெயர் வைப்பதில்லை. சாதி இந்துக்களே அப்படியான பெயர்களை சூட்டுவார்கள். படத்தின் இறுதியில் கேன்சர் பாதித்த அவ்தார் சிங் பிழைக்கும் போது, பூவராகன் மட்டும் தேவையின்றி சாகடிக்கப்படுகிறார்.
அதேபோல் முஸ்லிம்களும் படத்தில் கிண்டலடிக்கப்பட்டுள்ளனர். ஏழடி உயரத்தில் சர்க்கஸ் கோமாளி போல் காண்பிடித்திருப்பது, சவசவ என பிள்ளைகள் பெறுவது என இஸ்லாமிய சமூகம் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றெடுக்கிறார்கள் எனப்து இந்துத்துவ வாதிகளின் பிரச்சாரம். தசாவதாரத்தில் கமல் அதனை வழிமொழிந்திருக்கிறார். இதுவும் திருநாவுக்கரசின் குற்றச்சாட்டு.
கமலின் அனைத்து அவதாரங்களும் நல்ல வனப்புடனும், வடிவுடனும் இருக்க, தலித் தலைவர் பூவராகவன் மட்டும் கறுப்பாக இடி அமீனை நினைவுப்படுத்தும் அருவருப்புடன் காண்பித்துள்ளதும் ஏன் என்பது எழுத்தாளர் சாமி நிவேதிதாவின் கேள்வி. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களைப் போல் முஸ்லிம்களை ஆடை முதல் மொழிவரை அந்நியப்படுத்தி காட்டியிருப்பது இந்துத்துவ சதி என அவர் மேலும் கூறுகிறார்.
முனியாண்டியின் இந்த சொற்போருக்கு இஸ்மாயிலின் தத்துவ விளக்கம் பின்வருமாறு:
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் சில, தசாவதாரத்தில் பிரதிபலிப்பது போல் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தலித் தலைவர் பூவராகவன் கிருஷ்ணராக சித்தரிக்கப்பட்டுள்ளார். துச்சாதனன் திரெளபதியின் துகில் உரியும்போது, அபயம் அளிப்பவர் கிருஷ்ணர். அசினின் சேவை உருவப்படும்போது காப்பாற்றுகிறவர் பூவராகவன்.
பூவராகவன் கிருஷ்ணனின் இன்னொரு பெயர். கிருஷ்ணர் கார்வண்ணன், பூவராகனும் கார் வண்ணன். கிருஷ்ணனின் மரணம் காலில் அம்பு குத்தி நிகழ்ந்தது. பூவராகவனின் மரணமும் அப்படியே. இதில் தலித் விரோதம் என்று சொல்ல எதுவும் இல்லை. கறுப்பாக இருப்பது அருவருப்பு என்றால், நீக்ரோக்கள் அருவருப்பானவர்கள் என்கிறாரா சாருநிவேதிகா?
மேலும் கறுப்பு என்பது கேவலம் அல்ல. கறுப்பர்களும் நாடாளலாம், தலைவராகலாம். அந்த அர்த்தத்தில்தான் பூவராகவன் கறுப்பாக காண்பிக்கப்பட்டுள்ளார். இறுதி காட்சியில் பிராமணர் ஒருவர், அவன் கறுப்பு, என்ன சாதியோ என கூறும்போது, கிருஷ்ணவேணி பாட்டி, போடா... புள்ள உள்ளுக்குள்ள சிவப்புடா என்று கூறுவதே இதற்கு சான்று.
முஸ்லிம்கள் குறித்த முனியாண்டியின் கேள்விக்கு இஸ்மாயிலிடம் சரியான பதிலில்லை. சர்ச்சை உச்சத்தில் எட்டியபோது அவர்களுடன் சூசையும் சேர்ந்து கொண்டான்.
நரைத்த தலை, குறுந்தாடி, கதர் சட்டை, காவி வேஷ்டி, செருப்பில்லாத கால். பொருள் முதல்வாதியான சூசையின் கண்ணோட்டம் வேறு மாதிரி இருந்தது.
ரஜினி படம்னா மட்டும் கலெக் ஷனாகும். கமல் படம்னா நஷ்டம்னு பிளாட்பார்ம்ல கிடக்கிறவன் முதல் பத்திரிகைக்காரன் வரை தண்டோரா போடுறான். லாபம்னு பார்த்தா ரஜினி படம். அப்புறம் விஜய், அஜித்துன்னு சொல்லும்போது, அம்பது வருஷமா சினிமாவில் இருக்கிறவனுக்கு கோவம் வராதா? அறுபது கோடியில படம் எடுத்து அதுலயும் லாபம் காட்ட முடியும்னு கமல் வீராப்புல எடுத்தது தசாவதாரம். அதுக்கு தத்துவ விளக்கம் கொடுக்கிறதெல்லாம், குரங்குக்கு குல்லா மாட்டுற வேலை...
சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மது விடுதி மூடுவதற்கோ இன்னும் அதிக மணித்துளிகள் உள்ளன. விடுதியின் இடமோ விசாலம். சர்ச்சையில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் வார்த்தை பொட்டலங்களும், தத்துவ சைடிஸ்மாக எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம்.