54
வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விமர்சனங்களுக்கு இடம்தராத விருதுகள் இந்த பூமியில் இல்லை. ''
எனக்கு சிறந்த நடிகருக்கான ஜுரி அவார்டு தந்திருக்கிறார்கள். இதே ஜுரிகள்தானே இன்னொருவரையும் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தார்கள்'' என்று விருதுகள் வழங்கப்படும் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார், 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான ஜுரி விருது பெற்ற நடிகர் திலகன்.இன்னும் ஏராளமான விமர்ச்சனங்கள் இதேபோன்று முன்வைக்கப்படலாம். அதற்கு முன் தேசிய விருது பெற்றவர்களில் நம்பிக்கையான சிலர் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.
பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ப்ரியாமணி. பருத்திவீரனுக்கு முன்பும் சரி பின்பும் சரி ரசிகர்களின் மலிவான உணர்ச்சியை தூண்டும் தமிழ் சினிமா கதாநாயகியாகவே திரையை நிறைத்திருக்கிறார் ப்ரியாமணி. (விதிவிலக்கு அது ஒரு கனாக்காலம்).
அசட்டுத்தனமாக சிரித்து கதாநாயகனின் அணைப்புக்காக ஏங்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த ப்ரியாமணியை பருத்திவீரனில் முற்றிலுமாக மாற்றியிருந்தார் இயக்குனர் அமீர். தூங்கி எழும்போதும் துலக்கி வைத்த குத்து விளக்காக நடிகை தெரிய வேண்டும் என்பது பொது விதி. இதனை பருத்திவீரனில் உடைத்தார் அமீர்.
எண்ணெய் வழியும் முகம், சாதாரண சீட்டிப்பாவாடை என கிராமத்து முத்தழகை அப்படியே கண்முன் கொண்டு வந்தார். அதேபோன்று குரல். ஜோதிகா, சிம்ரன், சினேகா என்று திரையில் யார் தோன்றினாலும் குரல் ஒன்று போலிருக்கும். மதுரமான குரல் உடைய டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அனைத்து நடிகைகளுக்கும் குரல் கொடுத்தால் எப்படி குரலின் தனித்துவத்தை அடையாளம் காண்பது?
பிசிறடிக்கும் குரலுக்கும் அதற்கேயுரிய சுவை உண்டு. பருத்தி வீரனில் ப்ரியாமணி தனது சொந்தக் குரலில் பேசியது அவருக்கு தேசிய விருது கிடைக்க முக்கிய காரணமாக அமைந்தது. இப்போது நம்முன் உள்ள கேள்வி, விருது வாங்கத் தகுதியுடையவராக ஒரு நடிகையை மாற்றுவதும், அதே நடிகையை மலிவான உணர்ச்சியை தூண்டும் கேளிக்கை சாதனமாக மாற்றுவதும் யார் கையில் உள்ளது?பருத்திவீரன் வெளிவந்த பிறகு அதேபோன்ற வேடங்கள் நிறைய வருவதாகவும் ஆனால், அவற்றை தவிர்த்து கிளாமர் வேடங்களில் நடிக்கப் போவதாகவும் பருத்திவீரன் வெளிவந்தபோது தெரிவித்தார் ப்ரியாமணி. இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். நடிக்கத் தெரிந்த நடிகையை விட, கிளாமர் காட்டத் தெரிந்த நடிகையே தங்களுக்கும் தங்கள் படங்களுக்கும் பாதுகாப்பு என கமர்ஷியல் ஹீரோக்களும், இயக்குனர்களும் நினைப்பதையே ப்ரியாமணியின் ஸ்டேட்மெண்ட் சுட்டிக் காட்டுகிறது என்று சொன்னால் அதனை முழுமையாக மறுக்க முடியுமா?
சிறந்த பொழுதுபோக்குப் படம் உள்பட நான்கு விருதுகளை கிரானியின் லகே ரஹோ முன்னாபாய் வென்றுள்ளது. ஒரு கமர்ஷியல் படம் எப்படி இருக்க வேண்டும் என்தபற்கு இப்படம் உதாரணம். காதலிக்காக காந்தியை படிக்கும் கதாநாயகனின் கண்களுக்கு காந்தி தெரிகிறார். நாயகனும் அடிதடியை விட்டு காந்திய வழியில் பிரச்சனைக்கு தீர்வு காண்கிறார்.
கமர்ஷியல் படம் என்றால் அதீதமான வன்முறை, அளவுக்கு மீறிய கவர்ச்சி என சினிமா புத்தியில் தேங்கிக் கிடந்த சாக்கடையை லகே ரஹோ முன்னாபாய் துடைத்தெறிந்தது. இந்தப் படத்தில் முகம் சுளிக்கும் கவர்ச்சியில்லை, மனம் கசக்கும் வன்முறையில்லை.
இப்படத்தில் காட்டப்படும் வழிமுறைகளை பின்பற்றி பல இடங்களில் அகிம்சை முறையில் போராடி தங்கள் உரிமைகளை மக்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
54
வது தேசிய விருது பட்டியலில் இரண்டு பெயர்கள் பளீரென்று துலங்குகின்றன. அவர்கள், சிறந்தப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புலிஜென்மம் படத்தை இயக்கிய ப்ரியநந்தன். இன்னொருவர் சிறந்த இயக்குனருக்கான விருது பெற்ற மதூர் பண்டார்கர்.பத்மராஜன், அரூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் வரிசையில் வைத்து போற்றப்படும் படைப்பாளி இயக்குனர் ப்ரியநந்தன். மலையான சினிமா அதன் தனித்துவத்தை இழந்துவிட்டது என அங்குள்ள சூப்பர் ஸ்டார்களே ஒப்புக்கொண்ட இரண்டாயிரத்தின் முற்பகுதியில் ப்ரியநந்தனின் 'நெய்த்துக்காரன்' படம் வெளிவந்தது.கேரளாவின் தீவிர சினிமா ரசிகர்களிடையே ஒரு அலையை எழுப்பியது நெய்த்துக்காரன். கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் ஈஎம்எஸ் நம்பூதிரிபாடின் வாழ்க்கையை இப்படம் பிரதிபலித்தது.ஆச்சாரமான நம்பூதிரி குடும்பத்தில் பிறந்து கம்யூனிஸ கொள்கையில் ஈடுபாடு கொண்டு, அதற்காக சொத்தை இழந்து, பெரும் போராட்டங்களை சந்தித்து, உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச அரசின் முதல் முதலமைச்சர் என்ற பெருமையை வென்றெடுத்தவர் ஈஎம்எஸ்.
அவரது காலத்திலேயே அவரது கம்யூனிஸ கொள்கைகள் வெளிறிப் போவதையும், கட்சியின் சந்தர்ப்பவாத திரிபுகளையும் காண நேர்ந்தால் எப்படியிருக்கும்? நெய்த்துக்காரனில் ஈஎம்எஸ் பாத்திரத்தில் நடித்த முரளி அன்றைய வருடம் (2002) தேசிய அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில அரசின் சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் நெய்த்துக்காரனுக்கு கிடைத்தது.
நான்கு வருடங்கள் கழித்து அதே முறையை பிரதான பாத்திரமாகக் கொண்டு புலிஜென்மம் வெளிவந்துள்ளது. கே.பிரபாகரனின் புலிஜென்மம் நாடகத்தை தழுவி இப்படத்தை எடுத்துள்ளார் ப்ரியநந்தனன். தனித்துவமான கொள்கையுடன் பிறருடன் ஒட்ட முடியாமல் வாழும் பிரகாசன் (முரளி) என்ற கதாபாத்திரம் வழியாக கதை சொல்லப்படுகிறது. படத்தில் பிரகாசன் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முயற்சிக்கிறார். அந்த முயற்சியினூடாக கேரளாவின் நிலம், போக்குவரத்து, தண்ணீர் மற்றும் இனம் குறித்தான அடிப்படைப் பிரச்சனைகளை படம் சொல்லிச் செல்கிறது.
தேசிய விருது கிடைத்த இப்படம் அது வெளியான போது, வெகுஜனங்களால் கண்டு கொள்ளப்படவில்லை என்பது, நல்ல படங்களை மக்கள் ரசிக்கிறார்களா அல்லது தங்களுக்குப் பிடித்தமான படங்களை மட்டும் ரசிக்கிறார்களா என்ற கேள்வியை மீண்டும் எழுப்புகிறது.
இந்திப் பட இயக்குனர் மதூர் பண்டார்கர் அவரது டிராபிக் சிக்னல் படத்துக்காக சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதூரின் நான்காவது படம் இது. முதல் படம் சாந்தினி பார், மும்பையின் அடித்தட்டு பார்களில் ஆடிப் பிழைக்கும் ஒரு பெண்ணை பற்றியது.தபு, அதுல் குல்கர்னி நடித்த இப்படம் போலீஸ், ரவுடிகள், அரசியல் தலைவர்கள் மவூருக்குமான தொடர்பு, சிறுவர் சீர்த்திருத்த ஜெயிலின் பாலியல் கொடுமை என விளிம்பு நிலை மக்களின் நெடுக்கடிகளை, அழிவின் புதைகுழியிலிருந்து மீளமுடியாத அவலத்தை அணுகி ஆராய்ந்தது.பேஜ் 3 மதூரின் இரண்டாவது படம். அப்பர் கிளாஸின் பார்ட்டி கல்சர், அதன் போலி மரியாதை, அந்த புன்னகைக்கு பின்னாலுள்ள பொறாமை, எரிச்சல் என உயர்மட்ட மனிதர்களின் போலித்தனத்தை பேஜ் 3 தோலுரித்தது.மூன்றாவது படமான கார்ப்பரேட், கார்ப்பரேட் நிறுவனங்களின் நடைமுறையை கேள்விக்குட்படுத்தியது. பல கார்ப்பரேட் முதலாளிகளின் கோபத்திற்கு இப்படம் ஆளானது.டிராபிக் சிக்னலில் மதூர் காட்டியிருக்கும் உலகம் நாம் தினந்தோறும் கடந்து செல்வது. மும்பையின் டிராபிக் சிக்னலை நம்பி பிழைக்கும் எளிய மனிதர்களின் கதை இது. ஏமாற்றி பிழைப்பவன், பிச்சைக்காரர்கள், சிறு வியாபாரிகள் என அது ஒரு பெரிய கூட்டம். சிக்னலில் சிவப்பு விழும் சில நொடிகளே இவர்களின் வருமானத்திற்கான ஆதாரம். ஆனால் அந்த வருமானமும் சில பெரும்புள்ளிகளின் கைக்கு செல்லும் அவலம்.
மும்பையின் பிச்சை எடுக்கும் தொழிலில் பலகோடி ரூபாய் புழங்குவதையும், அதற்குப் பின்புலமாக அதிகாரத்தின் கைகள் இயங்குவதையும் பொட்டில் அடித்தார் போல சொல்லிச் செல்கிறார் மதூர். முதல் படத்தைப் போலவே பிச்சைக்காரர்கள், ஏமாற்றுகிறவர்கள், விபச்சாரிகள் என விளிம்புநிலை மக்களின் அவலம் டிராபிக் சிக்னலிலும் பரிதாபமின்றி நிசர்சனமாக சொல்லப்பட்டுள்ளது.
வாகன நெரிசலின் வசதி கருதி மேம்பாலம் அமைக்கையில், சிக்னல்களுக்கு வேலையில்லாமல் போகிறது. அது எத்தனை உயிர்களின் வருமானத்தை வாழ்வை பறிக்கிறது என்பது பகீர் உண்மை!
பாலிவுட்டின் வழக்கமான பளபளப் புகளுக்குள் சிக்காதவர் மதூர். அதே போல மலையான இயக்குனர் ப்ரிய நந்தனன். இவர்களை தேர்வு செய்ததன் மூலம், தேசிய விருது தன்னை பெருமைப்படுத்திக் கொண்டது எனலாம்.