தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை. தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த சித்திரம் இன்னும் விசேஷம். ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் உதட்டை அழுத்தி, புட்டு வேணுமா என்று கேட்கும் டயலாக் கண்டிப்பாக உண்டு.தமிழர்களுக்கு அரசியல் பார்வை சிறிது மங்கல் என்பதால், திருமதி நாயரின் முண்டோடும், மாராப்பு இல்லாத ஜாக்கெட்டோடும் தங்களது சித்தரிப்பை நிறுத்திக் கொண்டார்கள்.மலையாளிகள் அப்படி அல்லவே! என்ன இருந்தாலும் கேரளா சோஷலிச பூமி. தத்துவங்கள் செழித்து வளர்ந்த நாடு. அரசியல் அறிவோ வெகு விசேஷம். மலையாளப் படங்களில் தமிழர் குறித்த சித்தரிப்பு, நம்மைப் போல், முண்டு ஜாக்கெட் என ஆடையோடு முடிந்து விடும் ஒரு படித்தானது அல்ல. காளி கையிலிருக்கும் சூலம் மாதிரி பல்முனைகள் கொண்டது! (குத்தினால் ஆள் குளோஸ்)மலையாள திரைப்படங்களில் தமிழர்களை குறிக்கும் விசேஷ பெயர், பாண்டி! மூன்றெழுத்துப் பெயர் என்றாலும் பாண்டிக்கு அர்த்தங்கள் முன்நூறு. குளிக்காதவன்...இப்படி! ஏதாவது ஒரு மலையாளியை, பாண்டி மாதிரி இருக்கிறியே என்றால் போதும்; லாரியில் அடிபட்ட மாதிரி சிதறிப் போவான்.
அக்கரை அக்கரை அக்கரை என்றொரு படம். ப்ரியதர்ஷன் இயக்கியது. கடத்தல்காரன் ஒருவனை கண்டுபிடிக்க அமெரிக்கா செல்லும் மோகன்லால், அங்குள்ள உயரமான கட்டடங்களைப் பார்த்து பிரமித்தவாறு, அருகிலிருக்கும் சீனிவாசனிடம் இப்படிச் சொல்வார்; ''எல்.ஐ.சி. பில்டிங்கைப் பார்த்து வாய் பிளக்கும் தமிழர்கள், இதைப் பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்திடுவான்களே!''
முன்பு சென்னை வரும் மலையாளிகளின் முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக எல்.ஐ.சி. இருந்தது. அண்ணாந்து பார்க்க எஸ்.ஐ.சி. போலொரு கட்டடம் அன்று கேரளாவில் இல்லை. அந்த பொச்செரிச்சலில் அவலை நினைத்து இடித்த உரல்தான் மேலே உள்ள மோகன் லாலின் பேச்சு.
மற்றொரு படம், சுரேஷ் கோபி நடித்தது. பெரிய பீர் போத்தல் போலிருக்கும் நடிகர் ராஜூ போலீஸ் அதிகாரி. வழக்கம் போல ஒரு தமிழ் அடிபொடி வில்லன். அடிபொடி ராஜூவை பார்த்து கேட்பார்; ''நீ பொன்னுசாமி இல்லையா?'' தெரியாமல் சாணியை மிதித்த தொணியில் ராஜூ சொல்வார்; ''என்னது... பொன்னுச்சாமியா? நான் நல்ல ஐயங்கார் குடும்பத்துல பிறந்தவனாக்கும்.''
தமிழ்ப் பெயர்களான குப்புசாமி, பொன்னுசாமியெல்லாம் மலையாளிகளைப் பொறுத்தவரை தரக்குறைவானவை. முருகன், செல்வம் முதலான பெயர்களை வைக்க முன்பு தலித்துகளுக்கு அனுமதியில்லை. மீறி வைத்தார்கள் ஆதிக்கச் சாதியினரால் தண்டிக்கப்பட்டனர். மாடன், இருளன் போன்ற பெயர்களே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ராஜூவின் பேச்சில் ஒலிப்பதும் அந்த ஆதிக்கச் சாதியினரின் மனோ நிலைதான்.
திரைப்படங்களில் நாம் மறந்தும் அரசியலை தொடுவதில்லை. முதலமைச்சர் கனவுடன் திரியும் நடிகர்களும், அரசியல் வேறு சினிமா வேறு என்று இரண்டையும் உஷாராக பிரித்தே வைத்திருக்கிறார்கள். நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டுக் கொண்டே, மகளிர் முன்னேற்றம் குறித்துப் பேச இதுவொரு செளகரியம்.
மலையாளிகள் வேறுமாதிரி. திரைப்படங்களில் அரசியல் பேசுவது அவர்களுக்கு கப்பையும், கள்ளும், கருமீனும் ஒன்றாக கிடைத்த மாதிரி. அதுவும் முல்லைப் பெரியாறு என்றால் கொள்ளை இன்பம், கூத்தாடி விடுவார்கள்!
மோகன்லாலின் உடையோன் படத்தின் வில்லன் சலீம்கெளஸ் ஒரு தமிழன். தமிழன் சொல்வான், ''தமிழ்நாட்டுல மழை பெஞ்சா உங்க கிணத்துல தண்ணி'' லாலுக்கு நக்கல் அதிகம். அவர் சொல்வார், '' அதுக்கு உங்க ஊர்ல மழை பெஞ்சாதானே!'' இன்னொரு காட்சி. தமிழ் வில்லன் சொல்வார், ''தமிழ்நாட்டு கரும்பு சாப்பிடுங்க, தேன் மாதிரி.'' பதிலடி பின்னாலேயே வரும். ''எங்க ஊர் தண்ணியே தேன் மாதிரிதான்!''
மலையாளிகளுக்கு தங்களது நீர் வளம் குறித்து செருக்கு உண்டு. தமிழ்நாட்டின் நீர் பற்றாக்குறை மீது வெறுப்பு உண்டு. தமிழ்நாடு ஒரு பொட்டல்காடு. கேரளா இயற்கை வளம் கொழிக்கும் கடவுளின் சொந்த தேசம்.
உண்மை என்னவென்றால், மூன்று நாள் நாம் தொடர்ச்சியாக பந்த் நடத்தினால், ஒட்டுமொத்த கேரளாவும் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதுதான். அரிசி முதல் பருப்பு வரை எல்லாமே இங்கிருந்துதான் கேரளா செல்கிறது.
இது பரவாயில்லை. தமிழனால் கேரளாவுக்கு குலநாசம் என்றொரு மனப்பிராந்தி மலையாளிகளுக்கு உண்டு. பல திரைப்படங்களில் இந்தப் பயங்கர கற்பனை தான் பாடுபொருள்.
இதுவும் மோகன்லால் படம். அவரது அண்ணன் நெடுமுடிவேணு. அக்மார்க் சுதேசியான அவர் கோக், பெப்சி முதலான சுதேசி தயாரிப்புகள் ஊரில் நுழையாமல் தடுத்தாட் கொள்பவர். அவரது சுதேசி கனவை தகர்க்கும், அயல்நாட்டுப் பொருட்களின் விற்பனையாளராக வருகிறவர் ஒரு தமிழர். சில பல சண்டைகளுக்குப் பிறகு தமிழனை துரத்தியடித்து கடவுளின் சொந்த தேசத்தின் கலாச்சாரத்தை மீட்டெடுப்பார் மோகன்லால்.
நரன் படத்திலும் மோகன்லாலுக்கு ஏறக்குறைய இதே கலாச்சார காப்பாளர் வேடம்தான். தமிழில் பெயர்ப் பலகை வைப்பதை எதிர்ப்பார் லால். அப்படி வைத்தால் கடைக்கு தமிழன் வருவான். கடையே கண்றாவியாகிவிடும். லாலின் பேச்சை கேட்காமல் ஒருவர் தமிழில் பெயர்ப் பலகை வைப்பார். அதிசயம்! அடுத்தக் காட்சியில் கடைக்கு வரும் தமிழர்கள் காசு தராமல் கடைக்காரனையே இழுத்துப் போட்டு மிதிப்பார்கள்
உலகமெல்லாம் உதைபடும் தமிழர்கள் இப்படி மலையாள சினிமாவில் மட்டும் அப்பாவி மலையாளிகளை உதைத்துக் கொண்டிருப்பார்கள். (இறுதியில் மோகன்லால் தனியாளாக அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்வது வேறு விஷயம்)
தமிழர்கள் குறித்த மலையாள சினிமாவின் இந்தப் 'பயங்கர கற்பனை' நடைமுறையிலும் உயிர்ப்புடன் இயங்குகிறது. பிழைப்புக்காக கேரளா செல்லும் தமிழர்களை எதிரிகளாகக் கருதி, தொழிற்சங்கங்களில் சேர்த்துக் கொள்ளாமல் பட்டினியில் தவிக்கவிடும் சம்பவங்கள் கேரளா முழுவதும் அரங்கேறும் தினசரி நிகழ்வுகள்.
மெத்த படித்த, அரசியலில் கரை கண்ட மலையாளிகளின் அரசியல் விழிப்புணர்வின் விளைச்சல் இது! நடிகர்களை நாடாள வைப்பவர்கள் என அவர்களால் இகழப்படும் தமிழர்களும், அவர்களைப் போல் 'அரசியல் விழிப்புணர்வு' பெற்றால், கொஞ்சம் கற்பனைதான் செய்து பார்ப்போம். சேட்டன்கள் டீ கடைகளை மூடி வாரிச் சுருட்டி ரயிலேற வேண்டியதுதான். அவர்களுடன் தமிழகத்தின் இட நெருக்கடியும், ஜன நெரிசலும் ரயிலேறி விடும். ஆக, தமிழர்கள் மலையாளிகள் அளவுக்கு அரசியல் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது, அவர்களது சுக வாழ்வுக்கும், ஆரோக்கியத்திற்குமே நல்லது.
சொல்லும் போது எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். தமிழர்களை முன்னிறுத்தி மலையாளிகளை கிண்டல் செய்யும் படங்களும் உண்டு. அதெல்லாம் அத்தி பூத்தார் போல. ஒரு அத்தி சத்தியன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா. பஞ்சாயத்து அளவிலேயே வெடிகுண்டு வீசுவது கேரள அரசியலில் ஓர் அங்கம். அப்படியொரு வெடிகுண்டு ஸ்பெஷலிஸ்ட் கம்யூனிஸ்டான இன்னசென்ட்.
தமிழ்நாட்டிலிருந்து வரும் பார்த்திபனை விரட்ட இன்னசென்ட் ஒரு பாம் வீசுவார். பார்த்திபன் அவரது காதைத் திருகி, இதுவா பாம்? எங்க ஊர்ல இது தீபாவளிக்கு வெடிக்கிறதுடா என்று தோப்புக்கரணம் போட வைப்பார். ஒவ்வொரு தோப்புக்கரணத்துக்கும், தமிழனும் மலையாளியும் ஒன்று என்று இன்னசென்ட் சொல்ல வேண்டும்.
யதார்த்தத்தில் காதைத் திருகியோ, தோப்புக்கரணம் போட வைத்தோ யாரையும் திருத்த முடியாது. தமிழ் சினிமா சேச்சிகளின் முண்டையும், ஜாக்கெட்டையும் கடந்து வரவேண்டும். மலையாள திரைப்படங்கள் தமிழர் குறித்த பயங்கர கற்பனையிலிருந்து மீள வேண்டும்.
இரு கையும் தட்டினால்தானே ஓசை!