கோவை அண்ணா பல்கலை. துணைவேந்தர் நீக்கம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (15:20 IST)
ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணனை தமிழக அரசு பணி நீக்கம் செய்துள்ளது. இதனால், தமிழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட முதல் துணைவேந்தர் என்ற அவப்பெயருக்கு ராதாகிருஷ்ணன் ஆளாகி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவபாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்துள்ளார். அவர் வாங்கியுள்ள சொத்துகளுக்கு முறையான வருவாய் ஆதாரங்கள் இல்லை. எனவே, அவர் துணைவேந்தர் பதவியில் நீடிப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி.முருகேசன் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. ராதாகிருஷ்ணன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதால், அவர் பதவியில் நீடிப்பது தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்கும் படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தலைமை நீதிபதிஹ் பி.எஸ்.ராமன், துணைவேந்தர் ராதாகிருஷ்ணனை பணி நீக்கம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில், ராதாகிருஷ்ணன் மீது கடுமையான குற்றச்சாற்றுகள் கூறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பொதுநலனைக் கருத்தில் கொண்டு அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுகிறார்'' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்னையில் மேற்கொண்டு நீதிமன்றம் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று கருதுகிறோம். தமிழக அரசு இதில் திறம்பட நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, இந்த வழக்கை முடிக்காமல் வைத்திருக்க எந்த அவசியமும் இல்லை.

அதன்படி, வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் மீதான புகார்கள் தொடர்பாக நீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்துவதாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்