ராம்குமாரும் யதார்த்தம் புரியாத நீதியரசர் கிருபாகரனும்

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (12:38 IST)
ராம்குமாரின் தற்கொலை/மர்ம மரணம் குறித்து ஊடகங்கள் , சமூக நல ,தன்னல ஆர்வலர்கள் ,சமூக வலை தளங்கள்,அரசியல் சார்ந்த சமூக இயக்கங்கள் என கடந்த ஒரு வாரமாக அலசப்பட்டு வருகின்றது.


 


ராம்குமாரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வது தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் ராம்குமாரின் உடற்கூறு ஆய்வு வழக்கில் தீர்ப்பு சொன்ன மூன்றாவது நீதிபதி கிருபாகரன் இரண்டு கருத்துக்களை (யதார்த்தம் புரியாமல்) முன் வைக்கிறார்.
 
கருத்து: 1
 
இறந்தவருக்கு, கிடைக்க வேண்டிய நியாயங்கள், நீதிகள் அனைத்தும் மறுக்கப்பட வேண்டுமா? ராம்குமாரின் பெற்றோருக்கும், சமூகத்தின் ஒரு பிரிவு மக்களுக்கும் ஏற்பட்ட சராசரி சந்தேகங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டும் அல்ல, நீதிமன்றங்களுக்கும் மாண்புமிகு நீதியரசர்களுக்கும் உண்டு.
 
கருத்து: 2
 
நீதியரசர் கிருபாகரன் இந்த வழக்கில் அரசியல் கட்சிகளின் தலையீடு குறித்து கருத்து தெரிவிக்கிறார். பொதுவாக தலித் மக்களும் இஸ்லாமிய மக்களும் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தங்களின் சமூக பாதுகாப்பு குறித்து அதிகம் கவலைப்படுவார்கள். இருபெரும் சமூகங்களில் ஒருவருக்கு பிரச்சனை ஏற்படும்பொழுது அது அந்த சமூக பிரச்சனையாக பார்க்கப்படுவது இயல்பே. இளவரசன், கோகுல்ராஜ், டி .எஸ்.பி. விஷ்ணுபிரியா மற்றும் ராம்குமாரின் வழக்குகள் எல்லாம் தலித் சமூகத்தின் வழக்குகளாகவே பார்க்கப்படுகிறது. அதுபோல இராமநாதபுரம் எஸ்.ஐ. காளிதாஸ் செய்யது முஹம்மது என்ற இஸ்லாமியரை சுட்டு கொன்ற வழக்கு இஸ்லாமிய சமூகத்தின் வழக்காக மாற்றப்பட்டது.
 
ராம்குமாரின் தந்தை தொல். திருமாவளவனை சந்திக்கிறார், தொல். திருமாவளவன் வழக்கின் பார்வையாளராக நீதிமன்ற விசாரணையின்போது வந்து அமர்கிறார். ஜவாஹிருல்லா ராம்குமாரின் குடும்பத்தை சந்திக்கிறார். இதை எல்லாம் பார்த்த நீதியரசர் இது போன்ற ஒரு கருத்தை தெரிவித்து இருக்கலாம். என் சகநண்பர் ஒருவர் ஸ்வாதியின் பெற்றோரை ஏன் தொல். திருமாவளவன்/ஜவாஹிருல்லா என்று கேட்கிறார். இந்த சமூகத்தின் பரிணாமங்களை அறியாதவர் அவர். தொல். திருமாவளவனே ஸ்வாதியின் பெற்றோரை சந்திக்க விரும்பினாலும் இந்த சமூகம் அவரை ஸ்வாதியின் வீட்டுக்குள் அனுமதிக்காது என்பதுதான் யதார்த்தம்.
 
தனி மனிதன் (ராம்குமார் என்ற) ஒருவனது வழக்கு எப்போது  ஒரு சமூகத்தின் (தலித்) வழக்காக மாறுகிறது? அந்த தனி மனிதனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் நீதி கிடைக்குமா? என்ற சந்தேகம் வலுவடையும் போது, அந்த சமயங்களில்தான் தலித் அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் தங்களது கருத்தை/குரலை வலுவாக பதிவு செய்கின்றன. போராட்ட களம் காணுகின்றன. நீதிமன்றங்களின் கதவுகள் மீண்டும் மீண்டும் தட்டப்படுகிறது.
 
மதுவிலக்கு, ஹெல்மெட் மற்றும் நீர்நிலை ஆக்ரமிப்பு என்று உங்களது சிறப்பான நீதி பரிபாலனங்கள் என்ற வலிமை மிகுந்த புஜங்களை ஏன் ராம் குமாரின் தந்தையாரிடம் (மனுதாரர்) காட்டவேண்டும். மாண்புமிகு நீதியரசருக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். தலித் அமைப்புகள் மிகவும் வலுவாக பதிவுசெய்த கடந்தகால இளவரசன் மற்றும் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்குகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என்பதே உண்மை, எல்லா தலித்களின் தற்கொலை வழக்குகளிலும் தலித் அமைப்புகள் நீதி விசாரணை கேட்பது இல்லை, போராடுவது இல்லை.
 
சட்டம் சாமானியனுக்கும் நம்பிக்கை தரக்கூடியதாக இருக்க வேண்டும். மாண்புமிகு நீதியரசருக்கு ஒருமுறை அருளுடைமை அதிகாரம் குறள் 250 "வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின் மெலியார் மேல் செல்லுமிடத்து " நினைவுபடுத்துகிறேன்.

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
இயந்திரவியல் துறை ,
சத்தியபாமா பல்கலைக்கழகம் ,
சென்னை

அடுத்த கட்டுரையில்