வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரியின் முதல் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?- ‘காண்ட்ராக்டர்’ ஆறுமுகம் ‘டாடி’ ஆறுமுகம் ஆன கதை

வியாழன், 10 அக்டோபர் 2019 (18:04 IST)
'டாடி' ஆறுமுகம் என்பது வெறும் சொல் அல்ல எமோஷன்.


 
டாடி ஆறுமுகம் - 30 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற யூடியூப் சேனலின் கதாநாயகன்.
 
இளைஞர்கள் கோலோச்சும் யு-டியூபில் ஹிட்டடிக்கும் 60 வயது தாத்தா.
 
தொடர் தோல்வி
 
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகத்திடம் யாராவது, "நீங்கள் உச்சங்களை தொட போகிறீர்கள். இளைஞர்கள் உங்களைக் கொண்டாடப் போகிறார்கள்." என்று சொன்னால் சிரித்திருப்பார். இப்படிச் சொல்பவர் தம்மைக் கிண்டல் செய்வதாக நினைத்து கோபமும் கூடப்பட்டிருப்பார்.
 
ஆனால், இதுதான் நடந்தது.
 
காலம் எப்போதும் அடுத்த கணத்தில் ஏதோவொரு பெரிய ஆச்சரியத்தை ஒளித்து வைத்திருக்கிறது தானே? அப்படியான அற்புதத்தைதான் டாடி ஆறுமுகத்திற்கு ஒளித்து வைத்திருந்திருக்கிறது.
 
இப்போது தேனியில் வசிக்கும் டாடி ஆறுமுகம், அறுபது வயதில் யு- டியூபில் உச்சம் தொட்ட கதையை நம்மிடம் பகிர்கிறார்.


 
"சிறு வயதில் மிக மோசமான வறுமையில் உழன்று இருக்கிறேன். ஆறாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டேன். பார்க்காத வேலையில்லை. பெயிண்டராக, குடை ரிப்பேர் செய்பவராக, ஏலக்காய் தோட்டத்தில் எனக் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்திருக்கிறேன். இந்த வறுமையிலிருந்து விரைவில் மீண்டு விட வேண்டும் என்பதற்காக சினிமா முயற்சிகளைக் கூடச் செய்திருக்கிறேன். ஆனால் அப்போது எதுவுமே கூடி வரவில்லை." என்று பிபிசி தமிழிடம் கூறுகிறார் ஆறுமுகம்.
 
டெல்லி, பாம்பாய் எனப் பல ஊர்களில் துணி வியாபாரமும் செய்திருக்கிறார். ஆனால், அதிலும் நஷ்டத்தையே சந்தித்திருக்கிறார்.
 
முதல் சமையல்

இப்போது கருங்கோழி பிரியாணி, முழு ஆடு ரோஸ்ட் , விதவிதமான மீன் வறுவல் என அசத்தும் ஆறுமுகத்துக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுத்தது சுப்பம்மா என்கிறார்.
 
ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதுதான் தாம் சமையல் கலையை கற்றுக் கொண்டதாகக் கூறும் ஆறுமுகம், பின் அதையே தம் தொழிலாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
 
"சொந்த ஊர் போடி ஜக்கம்ம நாயக்கன்பட்டியில் ஹோட்டல் 'மாமியா' என ஹோட்டல் ஆரம்பித்தேன். ஆனால், அப்போது அதிலும் நஷ்டத்தையே சந்தித்தேன்" என்கிறார் ஆறுமுகம்.
 
மீண்டும் பெயிண்டராக தம் பணியைத் தொடங்கிய அவர், காண்ட்ராக்டர் ஆறுமுகமாக சிலரை வைத்து வேலை பார்த்து இருக்கிறார்.


 
'கண்ட்ராக்டர்' ஆறுமுகம் டூ ' டாடி' ஆறுமுகம்
பெயிண்டராக சிலரை வைத்து வேலை பார்த்திருக்கிறார்.
 
அந்த சமயத்தில் டிப்ளமோ படித்துவிட்டு சினிமா கனவுடன் சென்னை பயணம் ஆகி இருக்கிறார் இவரது மகன் கோபிநாத். ஆனால், திரைத்துறையில் வாய்ப்பு கிடைப்பது பெரும் சவாலாக இருந்திருக்கிறது.
 
மீண்டும் தேனி திரும்பிய கோபிநாத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. யு டியூபில் ஏதாவது முயன்று பார்க்கலாம் என்ற ஆர்வத்தில்தான் வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரியை தொடங்கி இருக்கிறார்.
 
 
ஆறுமுகம், "யு-டியூப் ஆரம்பிக்கிறேன் நீங்க அதுல ஹீரோன்னு கோபி சொன்னான். நான் முதலில் மறுத்துவிட்டேன். பெயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறேன். வர முடியாது என சொல்லிவிட்டேன். ஆனால், அவன் விடாப்பிடியாக இருந்தான்" என்கிறார்.
 
அவர், "என்னைச் சமைக்கச் சொல்லி ஏதேதோ படம் எடுத்தான். பின் ஏதோ யு - டியூபில் ஏற்ற போகிறேன் என்றான். ஏதாவது செய்யட்டும் என நானும் அவன் சொன்னதை எல்லாம் செய்தேன். ஆனால், பெரிதாக நம்பிக்கை இல்லை. அவன் ஆசைக்குச் சிறிது காலம் பார்ப்போம் மீண்டும் பெயிண்டிங் தொழிலுக்கே சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தேன்" என்று வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரியின் ஆரம்பக்கால நாட்களை நினைவு கூர்கிறார்.
 
முதல் மாதம் ஏழாயிரம் வந்தது. கோபி பெருமையாக வந்து சொன்னான். என்ன இது ஏழாயிரத்துக்கே இவ்வளவு பேசுகிறானே என்று நினைத்தேன். அடுத்த மாதம் நாற்பதாயிரம் வந்தது. எனக்கும் லேசாக நம்பிக்கை வந்தது. அதன் பின் லட்சங்களில் வர ஆரம்பித்தது என்கிறார் 'டாடி' ஆறுமுகம்.
 
யு - டியூபில் வந்த வருமானத்தைக் கொண்டு வீடொன்றை வாங்கி இருக்கிறார்கள் இவர்கள்.
 
கிராம சமையலை வைத்து ஒரு சேனல் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி வந்தது என கோபிநாத்திடம் கேட்டோம்.
 
அவர், "மொழிகளைக் கடந்த ஒரே விஷயம் உணவுதான். அனைவருக்கும் தெரிந்த விஷயமும் கூட. சுலபமாக அனைவரும் அதனுடன் கனெக்ட் ஆகிவிடுவார்கள். அதனை யோசித்தே இதனைத் தொடங்கினோம் என்கிறார் கோபிநாத்.
 
தொடக்கத்தில் இந்தளவுக்கு வருமானம் வரும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பணத்தை எல்லாம் கடந்து இப்போது இருக்கும் சப்ஸ்கிரைபர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற பதற்றம்தான் அதிகமாக இருக்கிறது என்கிறார் கோபிநாத்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்